சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்? பரபரப்பான தூத்துக்குடி!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட நீதிபதி சுபா தேவி தீர்ப்பை வாசிக்க உள்ள நிலையில், பரபரப்பு நிலவுகிறது.

    Advertisement

    தென்னகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அனிதா ராதாகிருஷ்ணன். பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் தங்கள் ஊர் பெயர்களை, தங்கள் பெயருக்கு முன்னாள் தாங்கி நிற்கும் நிலையில் தான் நடத்தி வந்த தொழில் நிறுவனத்தை அடையாளமாகக் கொண்டவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

    Advertisement

    அனிதா மெட்டல்ஸ் என்ற பாத்திரக்கடையை நடத்தி வந்த அவர் அதன் பிறகு அரசியல்வாதிகளின் பழக்கத்தால் அனிதா ராதாகிருஷ்ணன் என அடையாளப்படுத்தப்பட்டார். மதுரை மேலமாசியில் கடை வைத்திருந்தவர் அதற்கு பிறகு அதிமுகவில் இணைந்தார்.

    அனிதா ராதாகிருஷ்ணன்

    பின்னர் திமுகவில் இணைந்து, தற்போது தென் மாவட்ட அளவில் முக்கிய தலைவராக உருவெடுத்திருக்கிறார். அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவால் அரசியலுக்கு வந்தவர். அவரையே தனது குருவாக ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் காளிமுத்துவின் மகளும் சீமானின் மனைவியுமான கயல்விழிக்கு அண்ணன் சீர் கொண்டு போய்க் கொடுத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

    Advertisement

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் தான் இன்று அவர் தொடர்பான முக்கிய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வர இருக்கிறது. தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழக அரசியல் களத்திலேயே ஒரு பரபரப்பு எழுந்திருக்கிறது. அதாவது கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

    லஞ்ச ஒழிப்பு காவல்துறை

    அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் எழுந்தது. 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது அதிமுக ஆட்சிக்காலத்தில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    Advertisement

    சொத்து குவிப்பு வழக்கு

    அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயந்தி அனிதா ராதாகிருஷ்ணன், மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், ராதாகிருஷ்ணனின் சகோதரர்களான சண்முகானந்தன், சிவானந்தன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    விசாரணை நிறைவு

    ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சாட்சிகளிடம் விசாரணை குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதியான இன்று சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வழக்கு பட்டியல் விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இன்று தீர்ப்பு

    தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பை வாசிக்க உள்ளார். இதை அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    A Thoothukudi court is scheduled to pronounce its verdict in the disproportionate assets case against DMK MLA Anitha Radhakrishnan and his family.