4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி!

  • தூத்துக்குடி: புகழ்பெற்ற தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் வாரிசுதாரர்களுக்கு பென்ஷன் வருவது போல் போலியான வங்கி கணக்கு, ஆதார் எண் போன்றவற்றை தயார் செய்து 27 பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி கடந்த 7 ஆண்டுகளாக 4 கோடியே 51 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் 4 துறைமுக அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் வர்த்தக மையங்களில் ஒன்றாக திகழ்வது தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம். இந்தியாவின் 13 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த துறைமுகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    Advertisement

    சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும், நாட்டின் முக்கிய கொள்கலன் முனையங்களில் ஒன்றாகவும் இந்த துறைமுகம் அறியப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன.

    வஉசி துறைமுகம்

    இந்த துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிக்காலத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளின்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக சிபிஐக்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் அமைதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    Advertisement

    ஓய்வூதிய மோசடி

    விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த 27 ஊழியர்களின் வாரிசுதாரர்கள் பெயரில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதார் எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பிற அடையாள ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பென்ஷன் முறைகேடு,

    இந்த ஆவணங்களை பயன்படுத்தி, இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு செல்ல வேண்டிய ஓய்வூதியத் தொகை வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இந்த மோசடி ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் நடந்தது அல்ல. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தொடர்ந்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 7 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணையின்படி, இந்த மோசடி மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 51 லட்சம் அளவுக்கு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் துறைமுகத்தின் முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அதிகாரி பழனி குமாரசாமி, தரவு செயலாக்க அதிகாரி ஜோசப் துரைராஜா, கணினி உதவி இயக்குநர் காளியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஓய்வூதியத் தொகை

    அதேபோல் சந்தான சங்கர், மணிகண்ட பிரபு மற்றும் கிஷோர் பாபு ஆகிய ஊழியர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 7 பேரும் இணைந்து திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ சந்தேகிக்கிறது. தங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஓய்வூதியத் தொகையை மாற்றியதாகவும், பின்னர் அந்த பணம் எடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    போலி ஆவணங்கள்

    இதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, நம்பிக்கை மோசடி, அரசு நிதி கையாடல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையில் உள்ள சிபிஐ அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள், பணப் பரிமாற்ற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிபிஐ அதிகாரிகள்

    இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பதையும் சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். பணம் எங்கு சென்றது, யார் யார் பயனடைந்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு செல்ல வேண்டிய ஓய்வூதியத் தொகையை முறைகேடாக அபகரித்ததாக கூறப்படும் இந்த விவகாரம், துறைமுக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அதிர்ச்சி தகவல்கள்

    பல ஆண்டுகளாக யாருக்கும் சந்தேகம் வராமல் இந்த மோசடி நடந்ததாக கூறப்படுவதால், துறைமுக நிர்வாகத்தின் கண்காணிப்பு முறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சிபிஐ விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    English Summary

    CBI registers case against seven persons over alleged ₹4.51 crore pension scam involving fake beneficiary records at VOC Port.