தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் அருகிலுள்ள ஸ்டாலின் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் ஜார்ஜ் நியூட்டன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ராமச்சந்திரன் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் களக்காட்டில் வேலை பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தாயான இசக்கியம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை குழந்தைகளுடன் காமநாயக்கன்பட்டிக்கு அழைத்து வந்து தோட்டத்தில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரியவந்தது. இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கியம்மாள் தனது உறவினரான களக்காடு ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (19) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன், நேற்று இரவு காமநாயக்கன்பட்டிக்கு வந்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சுந்தரபாண்டியனை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் நடந்து வருகின்றன. இதற்கு போதை கலாச்சாரம்தான் காரணம் என சொல்லப்பட்டது. இன்று கூட சட்டசபையில் போதை கலாச்சாரத்தை ஒடுக்குவது குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன. அதாவது கோவை அமுதன், சென்னை தனுஷ்குமார், காஞ்சிபுரம் நீலகண்டன், சந்துரு ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கோவை அமுதன், போதை பொருள் கும்பல் குறித்து போலீஸிடம் ஏதோ தகவல் தெரிவித்ததாகவும் இதை அறிந்த அந்த கும்பல் அமுதனை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நடந்துள்ள இந்த கொலை சம்பவங்கள் பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளன.