தூத்துக்குடி: முகம் முழுக்க வண்ணம்.. கையில் சூலம்.. உடலில் காளி வேடம்.. இன்னொரு பக்கம் ராஜா, ராணி, குறவன், குறத்தி என விதவிதமான தோற்றங்களில் பக்தர்கள்.. நவராத்திரி என்றாலே தென் மாவட்ட மக்களுக்கு நினைவுக்கு வருவது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாதான். இங்கே பக்தர்கள் ஏன் இப்படி வேடமிட்டு வீடு வீடாக போகிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியிலுள்ள நம்பிக்கை என்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
நவராத்திரி என்றாலே வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது, அம்மனுக்கு ஸ்பெஷல் பூஜைகள் செய்வது எனக் களைகட்டும்... 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்த விழா ரொம்பவே பிரபலம்.
தென்மாநிலங்களை எடுத்துக்கொண்டால், கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றது என்றே சொல்லலாம்.. அதற்கு அடுத்தபடியாக நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதனால்தான் தென் மாவட்ட மக்களுக்கு நவராத்திரி என்றாலே, குலசை தசரா ஞாபகத்துக்கு வருகிறது. கிட்டத்தட்ட 300 வருடங்கள் பழமையான இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழா, மொத்தம் 10 நாட்கள் களைகட்டும். வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் இந்த விழாவுக்காகச் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். விரதமிருந்து, குடும்பம் குடும்பமாக வேடமிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் குலசேகரப்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்களும் திருவிழா கோலம் பூண்டுவிடும். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அம்பிகை முத்தாரம்மனும் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்... பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருளியதால் இந்த ஊருக்கு குலசேகரப்பட்டினம் என்று பெயர் வந்ததாம்.. இந்த குலசேகரப்பட்டினத்தை, குலசை என்று சுருக்கமாக மக்கள் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் சின்ன கிராமத்து கோயிலாக இருந்த இந்தத் தலம், பக்தர்களின் நம்பிக்கையால் இன்று பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக வளர்ந்துள்ளது... அம்மன் சுயம்புவாகத் தோன்றியதாகவும், முற்காலத்தில் ஊரில் பரவிய அம்மை நோயைக் குணப்படுத்தியதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, உடல்நல குறைவு, கடன் பிரச்சனை, பிசினஸில் தடை, கோர்ட் பிரச்சனை இப்படி பல்வேறு துன்பங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் நிறைவேறவும் பக்தர்கள் அம்மனை வேண்டுகிறார்கள். சாதி, மத வேறுபாடு எதுவுமே இல்லாமல் மக்கள் வந்து வழிபடும் தலமாகவும் இந்தக் கோயில் விளங்குகிறது. குலசை தசராவில் ஸ்பெஷாலிட்டியே, பக்தர்கள் அணியும் விதவிதமான கெட்டப் தான்.. 41 நாட்கள் வரை விரதமிருந்து, உடம்பெல்லாம் வண்ணம் பூசி, தங்களுக்குப் பிடித்த தெய்வங்களின் அல்லது பல்வேறு கேரக்டர் வேடங்களை ஏற்கிறார்கள்.. காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகன், பேச்சியம்மன், கருப்பசாமி எனத் தெய்வங்களின் கெட்டப்களை அணிந்து கலக்குவார்கள்.. கடவுள்கள் கெட்டப் மட்டுமேயில்லாமல், ராஜா, ராணி, குறவன், குறத்தி, கிழவி, பிச்சைக்காரர், குரங்கு எனப் பல்வேறு தோற்றங்களிலும் பக்தர்கள் வலம் வருவார்கள். அட்டை காளி, செங்காளி போன்ற வேடங்களையும் பக்தர்கள் விட்டுவைப்பதில்லை. மேளதாளங்கள் முழங்க, வேடமிட்ட பக்தர்கள் ஆடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று தர்மம் கேட்பார்கள்... பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் காணிக்கை வழங்குவார்கள். அந்த காணிக்கையை அம்மன் கோயில் உண்டியலில் செலுத்துவார்கள். முற்காலத்தில் முத்தாரம்மனே மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் கேட்டாராம். அதனால்தான், பக்தர்களம் இப்படி வேடமிட்டு காணிக்கை வாங்குகிறார்கள்.. தீவிரமான உடல்நல பாதிப்பு இருப்பவர்கள், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் இப்படி வேடமணிவதாகக் கூறப்படுகிறது. இப்படி விரதமிருந்து அம்மனை தரிசித்தால் அடுத்த வருஷ தசராவுக்குள் வேண்டுதலுக்கு பலன் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவின் சிறப்பை சொல்லும்போது தூத்துக்குடி அருகே ஸ்பீக் நகர் பகுதியில் செயல்படும் ஒரு குழுவையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த குழுவினர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தவறாமல் முத்தாரம்மனுக்கு மாலையிட்டு, பல்வேறு வேடங்களில் வழிபட்டு வருகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 40-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் தலைவராக அருணாச்சல பாண்டியன், செயலாளராக திருப்பதி, பொருளாளராக அரி கிரிஷ்ணன் ஆகியோர் செயல்படுகிறார்கள். புராண நம்பிக்கையின்படி, லலிதாம்பிகை 9 நாட்களில் தெய்வீக சக்தியைப் பெற்று, 10வது நாளான விஜயதசமியன்று மகிஷாசுரனை வதம் செய்கிறாள். இதனை நினைவுகூரும் விதமாக திருவிழாவின் 10வது நாளில் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும். இரவில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கடற்கரை பகுதியில் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அதிகாலை நேரத்தில் பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்களுடைய விரதத்தை நிறைவு செய்வார்கள். உடலில் பூசிய வண்ணங்களையும் கழுவிவிட்டு, அம்மனை வழிபடுவார்கள். வட இந்தியாவில் ராவணன் உருவ பொம்மைகளை எரித்தும், மைசூருவில் அரச பாரம்பரியத்துடன் கூடிய பிரம்மாண்ட ஊர்வலங்களுடனும் தசரா கொண்டாடப்படுகிறது. ஆனால் நம்முடைய குலசையில், பக்தர்களே காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை ஏற்று, வீடு வீடாகச் சென்று தர்மம் பெற்று, கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர வதத்திலும் பங்கேற்கிறார்கள். 41 நாட்கள் வரை விரதம் இருந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த வழிபாட்டு முறைதான் குலசை தசராவின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு வேடத்துக்கு பின்னாலும் ஒரு வேண்டுதல்.. ஒவ்வொரு காணிக்கைக்கு பின்னாலும் ஒரு நம்பிக்கை.. இதுதான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களை குலசை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கிறது..!!!தூத்துக்குடி - குலசை
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில்
41 நாள் விரதம்
விதவிமான வேடங்கள் - வேண்டுதல்கள்
தூத்துக்குடி ஸ்பீக் நகர்
10வது நாளில் திரளும் பக்தர்கள்
குலசை பக்தர்கள்