“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!

  • தூத்துக்குடி: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம் என முதலமைச்சர் விஜய் அண்மையில் பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு பேசியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தனது பொறுப்பில் இருந்து முதலமைச்சர் நழுவப் பார்க்கிறார் என விமர்சித்துள்ளார்.

    தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும். அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதலமைச்சர் விஜய்? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி. ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி நீதி வழங்கப் போகிறீர்கள்?

    சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் தவெக கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி. உங்களுடைய கட்சியினரை அழைத்து நடவடிக்கை எடுங்கள்.

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் 'சிஎம் சார்' தான் பொறுப்பு என்று கூறினீர்களே. இப்போது விஜய் முதலமைச்சரான உடன், 'தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்' என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரியாதா? அப்படி என்றால் நீங்கள் வசனம் பேசவில்லையா, புரிந்து பேசுகிறீர்களா?

    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா என்பது ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரச்சார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் 'இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

    ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் 'நாங்கள் தான், நாங்கள் தான்' என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கிறார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே 'எங்கள் முதலமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்' என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது.

    அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது 'மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்' என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பிங்க் பேட்ரோல் என்ற திட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்று தொடங்கியுள்ளார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Chief Minister Vijay recently spoke about the rising number of sexual crimes in Tamil Nadu, emphasizing the importance of individual morality. Commenting on this, former DMK Minister Geetha Jeevan criticized him, stating that he is attempting to evade his responsibilities.