தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்

  • தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நவத்திருப்பதிகளான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் யானை மற்றும் திருக்களூர் வைத்தமாநிதி கோவில் யானை இரண்டு யானைகளும் ஆழ்வார்தோப்பு பகுதியில் தனி கூடாரம் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு யானைகளும் இன்றைய தினம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் நீராடியது.

    Advertisement

    கோடை வெயில் கொளுத்தி எடுத்தால் மனிதர்களுக்கே நாக்கு வறண்டு போகிறது, அப்படியிருக்க ஐந்தறிவு ஜீவன்களான யானைகளின் பாடு சொல்லவா வேண்டும்? தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்று பெயரெடுத்த தாமிரபரணியே இந்த வெயிலின் தாக்கத்தால் இப்போது லேசாக மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால், ஆறு முழுக்க வறண்டு போய், ஒரு பக்கமாக குட்டி ஓடை போலத்தான் தண்ணீர் மெல்லிசாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    Advertisement

    ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால் என்ன, எங்களுக்கான குதூகலத்தை நாங்கள் தேடிக்கொள்ள மாட்டோமா என்பது போல ஒரு சுவாரசியமான காட்சி மக்களை நெகிழ வைத்திருக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நவத்திருப்பதி ஸ்தலங்களான, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் யானையும், திருக்களூர் வைத்தமாநிதி கோவில் யானையும் ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பிரத்யேகக் கூடாரத்தில் ஆசையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலையில் இந்த இரண்டு 'செல்லக் குட்டிகளும்' நீராடுவதுதான் வழக்கம்.

    பொதுவாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, யானைகள் கம்பீரமாக நின்று, தங்களது தும்பிக்கையால் தண்ணீரை வாரி வாரி உடம்பெல்லாம் பீய்ச்சி அடித்து 'ஷவர் பாத்' எடுத்து மகிழும். ஆனால், இப்போது ஆற்றில் முழங்கால் அளவு கூடத் தண்ணீர் இல்லை. அதற்காக அசந்துவிடுவார்களா என்ன?

    Advertisement

    "தண்ணீர் கம்மியா இருந்தா என்ன... நாங்க படுத்துட்டே குளிப்போம்ல" என்று சொல்வது போல, அந்த ஓடை போன்று ஓடிய தாமிரபரணி தண்ணீரில் இரண்டு யானைகளும் பக்கத்து பக்கத்தில் ஜாலியாகப் படுத்துக் கிடந்தன. தும்பிக்கையால் தண்ணீர் எடுக்க முடியாததால், யானைப் பாகன்கள் கீழே குனிந்து ஆற்றுத் தண்ணீரைத் தங்கள் கைகளால் அள்ளி அள்ளி, பாசத்தோடு யானைகளின் மீது ஊற்றி நீராட்டினர். அதை அப்படியே அனுபவித்துக்கொண்டு, கண்கள் சொக்க இரண்டு யானைகளும் ஆற்றுப் படுக்கையில் படுத்திருந்த அந்த எழில் கொஞ்சும் காட்சியை அப்படியே 'ட்ரோன்' கேமரா மூலம் மேலிருந்து படம் பிடித்துள்ளனர்.

    Advertisement

    வறண்ட ஆற்று மணலுக்கு நடுவே, ஒரு மெல்லிய நீரோடையில் இந்த இரண்டு பிரம்மாண்ட ஜீவன்களும் குழந்தை போலப் படுத்துக் கிடக்கும் அந்த வான்வெளிப் புகைப்படம், பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளையடிப்பதோடு, இயற்கைக்கும் விலங்குகளுக்குமான அந்தப் பேரன்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளது.

    English Summary

    Navatirpati temple elephants beat the summer heat by joyfully bathing together in the low-flowing Thamirabarani river, a beautiful moment captured via drone.