தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா என்பவர் கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையராகவும் உள்ளார். இவர் இரவு 11 மணி வரை அரசு ஊழியர்களிடம் வேலை வாங்குவதை குற்றம்சாட்டி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறையில் தர்ணா போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக மற்றும் தொழில் நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. நெல்லை, மதுரை வழித்தடத்தில் உள்ள முக்கியமான நகரமாகும். இங்கு ரயில்வே சந்திப்பு உள்ளது. இதுதவிர கன்னியாகுமரி-பெங்களூரு தேசி நெடுஞ்சாலையும் கோவில்பட்டி வழியாவே செல்கிறது. இங்கு தீப்பெட்டித் தொழில், கடலைமிட்டாய் மற்றும் நெசவுத் தொழில்கள் புகழ் பெற்றவை. கோவில்பட்டி நகராட்சியின் மக்கள் தொகை சுமார் 1,39,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. புறநகர் பகுதிகளை சேர்ந்தால் 1.67 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருக்கும். பெரிய நகரமாக மாறியுள்ள கோவில்பட்டி, தூத்துக்குடிக்கு அடுத்த பெரிய ஊராக அந்த மாவட்டத்தில் இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு ஆணையர் தனியாக தற்போது நியமிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா என்பவர் தான் கோவில்பட்டி நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக பணியாற்றி வருகிறார். அவர் நகராட்சியில் உள்ள ஊழியர்களை இரவு 11 மணி வரை வேலை பார்க்கச் சொல்வதாகவும், மாலையில் ஆறு மணிக்கு அலுவலகத்துக்கு வரும் அவர் இரவு 11 மணி வரை ஊழியர்களிடம் பணிகளை வாங்குவதாகவும். இதனால் ஊழியர்கள் மன உளைச்சல் அடைவது மட்டுமின்றி, குறிப்பாக பெண் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், எனவே பொறுப்பு நகராட்சி ஆணையரின் செயல்பாடை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் நகராட்சி ஆணையர் அலுவலலக்தில் பொறுப்பு நகராட்சி ஆணையர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா, நகராட்சி அலுவலகம் என்பது அரசு அலுவலகம் கிடையாது, மக்களுக்கான சேவை செய்யும் அலுவலகம். இதற்கு குறிப்பிட்ட வேலை நேரம் என்பது கிடையாது. தான் எந்த ஊழியரையும் பணி செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டு செல்லும்படி அறிவுறுத்தியதாக கூறினார். தொடர்ந்து நகராட்சி பொறுப்பா ஆணையர் இது போன்று செயல்பட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.