அதிவேகமாக பறந்த காரில் இருந்த கஞ்சா, பணம்.. எஸ்கேப் ஆக முயன்றபோது விரட்டிப் பிடித்த போலீசார்!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோதனை சாவடியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியை ஒட்டியபடி, போலீசார் கண்களுக்கு மறைந்து தப்பிச்செல்ல முயன்ற காரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்றனர். காரை நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், காரில் 7 கிலோ கஞ்சா, ரூ.4.40 லட்சம் பணம், கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் இருந்து காரில் மர்ம நபர்கள் கஞ்சா கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வல்லநாடு வழியாக திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, வசவப்பபுரம் காவல்துறை சோதனைச் சாவடியில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    Advertisement

    அப்போது அதிவேகமாக வந்த வெள்ளை நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் காரில் இருந்த மர்ம நபர்களை முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பாக ஒட்டி வந்ததுடன் போலீசாருக்கும் மறைந்து சென்று தப்பிச்செல்ல முயன்றதுடன் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சினிமா பாணியில் அந்தக் காரை விரட்டிச் சென்றதுடன், இது குறித்து அருகிலுள்ள செய்துங்கநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் தலைமையிலான போலீசாரும் அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடிப்பதற்காக சினிமா பாணியில் விரைந்து சென்றனர். இரு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் காரை விரட்டிச் சென்ற நிலையில், போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த மர்ம நபர்கள், வசவப்பபுரம் குளம் அருகே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து காரை சோதனை செய்த போலீசார், அதில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.4.40 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கத்தி, ஒரு அரிவாள் மற்றும் 5 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அந்தக் காரை பறிமுதல் செய்த செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு காரை நிறுத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், கடத்தலின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரை கண்டதும் காரில் அதிவேகமாக தப்பிச் சென்ற மர்ம நபர்களை இரு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் விரட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    On the Thoothukudi –Tirunelveli National Highway, a car attempted to evade police detection at a checkpoint by tailgating a container truck; the police, however, pursued the vehicle in a cinematic, high-speed chase. The occupants abandoned the car and managed to escape, but upon searching the vehicle, police seized 7 kilograms of ganja (cannabis), Rs. 4.40 lakh in cash, and weapons.