தூத்துக்குடி: மகளின் இன்ஸ்டாகிராம் காதலை ஏற்றுக்கொள்ளாத தாய், தனது மகனுடன் சேர்ந்து மகளை கொலை செய்திருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது அப்பட்டமான ஆணவ கொலைதான் என்று இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டின. இப்படி இருக்கையில் காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக காவ்துறை விடுத்துள்ள அறிக்கையில், "சமூக வலைதளங்கள் மற்றும் WhatsApp உள்ளிட்ட இணைய தளங்களில், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் நடைபெற்ற ஒரு பெண்ணின் மரணம் தொடர்பாக ஆணவக் கொலை நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
உண்மை நிலவரம் என்னவெனில், தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் 09.06.2026 அன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது தாய் எஸ்தர் பாலின் (36) மற்றும் சகோதரர் சிவஞானம்(20) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இச்சம்பவம் ஆணவக் கொலை என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் "ஆணவக் கொலை" குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். எனவே இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கயத்தாறு கொலை
மரணத்தில் சந்தேகம்
விசாரணையில் ஷாக்
ஆணவக்கொலை கிடையாது
போலீஸ் வார்னிங்