தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.
நாட்டின் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்காக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கையப்படுத்தப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி கருங்கற்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது வேலிகள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. அந்த கருங்கல் கட்டடத்தின் மேல் இரும்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக அலுவலக கட்டடப் பணிகள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ், ராக்கெட் லாஞ்சிங் பேட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் வகையில் ஹெலிபேட் தளங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியார் ராக்கெட் விண்ணில் ஏவும் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.