நடுரோட்டில் திறந்த ஆம்னி பஸ் கதவு.. நூலிழையில் தப்பிய வாகன ஓட்டிகள்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஓடிக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தின் இடதுபுற லக்கேஜ் கதவு திடீரென திறந்ததால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருடன் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி வெளியூர்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    திடீரென திறந்த கதவு

    இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் இடதுபுறத்தில் இருந்த லக்கேஜ் கதவு திடீரென திறந்தது. இதனால், பேருந்தின் அருகே சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து பதற்றமடைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, பேருந்தை முந்திச் சென்ற சில இருசக்கர வாகன ஓட்டிகள், ஆம்னி பேருந்தை நிறுத்துமாறு கூறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், திறந்திருந்த லக்கேஜ் கதவுகளை உடனடியாகப் பூட்டினார்.

    Advertisement

    அசம்பாவிதம் தவிர்ப்பு

    இருப்பினும், வாகன ஓட்டிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் திருச்செந்தூர் பிரதான பஜார் பகுதிக்கு பேருந்து சென்றிருக்கும். அங்கு மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், இதுபோன்று லக்கேஜ் கதவு திடீரென திறந்திருந்தால் பல வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருந்திருக்கும் என வாகன ஓட்டிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாகன ஓட்டிகள் மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஓடிக்கொண்டிருக்கும் ஆம்னி பேருந்துகளில் லக்கேஜ் கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முறையாகச் சரிபார்த்த பின்னரே இயக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    English Summary

    A major scare unfolded in Tiruchendur after the luggage compartment door of a moving private omnibus suddenly opened, leaving nearby motorists shocked and triggering a heated argument with the bus driver and cleaner.