சசிகலா ஆதரவாளர்.. பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா திடீர் கைது.. பின்னணி என்ன?

  • தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது சசிகலா கட்சியின் சார்பாக சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் இசக்கி ராஜா. இவர் கைது செய்யப்பட்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பாக திரண்டுள்ளனர்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் சசிகலா கட்சியின் சார்பாக சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் இசக்கி ராஜா. இவர் பசும்பொன் மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இன்று காலை தென்பாகம் போலீசார் இசக்கி ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். திடீரென இசக்கி ராஜா கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதுதொடர்பாக விசாரிக்கையில், தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட தங்க நகையில் உலோகம் அதிகமாக கலந்திருப்பதாக கூறி, அதனை வாங்கிய நபர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இதைடையே இசக்கி ராஜா நகை வாங்கிய நபருக்கு ஆதரவாக வேலவன் ஹெப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் பேசி இருக்கிறார். இதன் நகைக்காக ரூ.4.22 லட்சம் பெற்று கொண்டதோடு, மேலும் ரூ.1 கோடி கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதன்பின் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் வணிக சங்க நிர்வாகிகளுடன் சென்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக இசக்கி ராஜாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, பசும்பொன் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பாக திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க காவல் நிலையத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டு, அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Pasumpon Makkal Katchi Leader Isakki Raja Arrested in Thoothukudi for Extorting ₹1 Crore from Businessman