தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 76 பேர் ரத்ததானம் செய்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமிற்கு ஒன்றிய தலைவர் சித்திரைப் பாண்டி மற்றும் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் பாஜக நிர்வாகிகள் 76 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் பாஜக ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொண்டனர். பெரியார் பிறந்தநாளான இன்று சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் என்பதால் பாஜகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்." என தெரிவித்துள்ளார். அது போல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்." என தெரிவித்துள்ளார். மோடியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். 2001 அக்டோபரில் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2014-இல் பிரதமராகப் பொறுப்பேற்றுத் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது 25 ஆண்டு கால பொதுச் சேவை பயணமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.