தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் நுழைவு வாயில் முன்மண்டபத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சக்திகுமாருக்கு 28 வயது ஆகிறது. இவர் திருநெல்வேலியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழும் சக்திகுமார் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் நுழைவு வாயில் முன்மண்டபத்தில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளபிரான் கோயில் நுழைவு முன்மண்டபத்தில் இறந்து கிடந்தது சக்திகுமார் என்பது தெரியவந்தது. அவர் மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்தி குமார் மரணமடைந்ததை தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.