திருச்செந்தூர்-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரயில்? மத்திய அரசு தரப்போகும் குட்நியூஸ்

  • தூத்துக்குடி:திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூரில் இருந்து சென்னை, கோவைக்கு கூடுதலாக ரயில் இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்செந்தூர்-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயிலை இயக்க பரிசீலனை நடந்து வருகிறது என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறினார்.

    Advertisement

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    Advertisement

    திருச்செந்தூரில் இருந்து சென்னை, கோவைக்கு கூடுதலாக ரயில் இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. சென்னை-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்திருக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிச்சாலை, ஆறுவழிச்சாலை, எட்டுவழிச்சாலை பணிகள் மட்டுமன்றி, சென்னை-பெங்களூரு, பெங்களூரு-ஐதராபாத், ஐதராபாத்-சென்னை இடையிலான புல்லட் ரயில் திட்டங்கள் சாத்தியமாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.

    Advertisement

    முன்னதாக திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை நேற்று அமைச்சர் எல் முருகன் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக புதிய ரயில் சேவைகளை ரயில்வே தொடங்க வேண்டும். ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் போதிய தண்டவாள வசதி இருப்பதால், அங்கு பிட்லைன் வசதி ஏற்படுத்தி ரயில்களை அங்கேயே பராமரிக்க வசதி ஏற்படும்.

    திருச்செந்தூர் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள வசதியாகவும், சென்னை, மும்பை நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது திருநெல்வேலி-மும்பை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    The electrification of the double railway line between Chennai and Nagercoil has been completed. Union Minister of State L. Murugan stated that a proposal to operate a ‘Vande Bharat’ train between Tiruchendur and Chennai is under consideration.