திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி

  • தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரூ.100 டிக்கெட் விநியோகம் செய்ததில் ரூ.25 லட்சத்து 24 ஆயிரத்தை கோவில் ஊழியர்கள் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தது. அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில் சிலர் கையும் களவுமாக சிக்கினார்கள். இந்த சூழலில் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு புகாரில் சிக்கியவர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருப்பதி போல் திருச்செந்தூரிலும் கூட்ட நெரிசல் எப்போதுமே அதிகமாக உள்ளது. இந்த அங்கு சிறப்பு கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் இந்த 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிதானது இல்லை..

    Advertisement

    இந்த ரூ.100 டிக்கெட் விநியோகம் செய்வதில் முறைகேடு நடந்து வருவதாக பல பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தார்கள். இதனால் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அவரிடமே கூகுள் பே மூலம் கோவில் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதால் விவகாரம் வெளியில் வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ.100 டிக்கெட் விநியோகம் செய்வதில் ரூ.25 லட்சத்து 24 ஆயிரத்தை கோவில் ஊழியர்கள் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் அங்கு தற்காலிக பெண் ஊழியரான மேனகா என்பவர் ஈடுபட்டதாக கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    Advertisement

    மேலும் கணினி டிக்கெட்டுகளை சரி பார்க்காமலும் அலட்சியமாக இருந்ததாக கோவில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பான புகாரின்பேரில் மேற்கண்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இந்தநிலையில் மேனகா, பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி, இந்த முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன? இதில் மனுதாரர்களின் பங்கு என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மேனகா சார்பில் ஆஜரான வக்கீல் ஆரூண் ரசீத், திருச்செந்தூர் கோவிலில் கட்டண நிதி முறைகேட்டில் மேனகா மீது ஒட்டு மொத்த பழியையும் சுமத்தும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல. முறையாக போலீசார் விசாரித்து இந்த வழக்கை பதிவு செய்யவில்லை என வாதாடினார்.

    பின்னர் ஆஜரான அரசு வக்கீல், மனுதாரர்கள் கட்டண தொகையை முறைகேடு செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் வழங்கி இருக்கிறோம். விசாரணை முறையாக நடக்கிறது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களை மறு உத்தரவு வரும் வரை கைது செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    English Summary

    The Madurai Bench of the Madras High Court has ordered that those implicated in the complaint regarding irregularities in special darshan tickets at the Tiruchendur temple should not be arrested.