தூத்துக்குடி: சாத்தான்குளம் அரசு சமூக நீதி மாணவிகள் (ஆதிதிராவிடர்) விடுதியில் உள்ள ஆசிரியர், மாணவிகளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னதாக எம்.எல்.ஏ-வுக்கு whatsapp மூலம் தகவல் அனுப்பி நேரில் வரவழைத்து பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியில் அரசு சமூக நீதி மாணவியர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமார் 20 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த விடுதியில் உணவுகள் சரியாக வழங்கப்படவில்லை எனவும் காலையில் சமைத்த உணவை இரவில் மாணவிகளுக்கு வழங்கப்படுவதாகவும், இரவில் சமைத்த உணவை காலையில் வழங்கப்படுவதாகவும் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனுக்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் வாட்ஸ் அப் மூலம் ஆடியோவாக புகாரை அனுப்பினர். மேலும் "நீங்கள் கண்டிப்பாக எங்கள் விடுதிக்கு வந்து ஆய்வு செய்து விடுதியில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும்" எனவும் அந்த ஆடியோவில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டசபை உறுப்பினர் சரவணன் சம்பந்தப்பட்ட சமூக நீதி விடுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கி படிக்கும் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அந்த மாணவிகள் தங்களுக்கு உணவுகள் சரிவர செய்து தரப்படவில்லை எனவும், ஒரு நாளுக்கான உணவை அந்த விடுதியின் பெண் சமையல் ஊழியர் அதிகாலையிலேயே சமைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவதாகவும் எம்எல்ஏவிடம் புகாராக தெரிவித்தனர். மேலும் இது குறித்து எம்எல்ஏ சம்பந்தப்பட்ட பெண் சமையல் ஊழியரிடம் கேட்டபோது, மாணவிகள்தான் இவ்வாறாக சமைக்க சொல்வதாக மாணவிகளின் மீது பழி போட முயன்றார். உடனே அங்கிருந்த மாணவிகள் நாங்கள் யாரும் அப்படி கேட்கவில்லை என எம்எல்ஏவிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இரவு உணவுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்த எம்.எல்.ஏ இந்த உணவை சாப்பிட கூட முடியவில்லை எனவும் அங்கிருந்த ஊழியர்களிடம் கடிந்து கொண்டார். தொடர்ந்து அங்கிருந்த தனது உதவியாளரை அழைத்து இரவு உணவுகளை வெளியில் இருந்து கொண்டு வந்து மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து எம்எல்ஏவிடம் புகார் அளித்து பேசிய மாணவிகள் மாணவிகளுக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை தொடர்பாக அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்ட "மாணவியை ஆசிரியரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்ததாகவும்" எம்.எல்.ஏ-விடம் பரபரப்பாக புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியரை கடிந்து கொண்ட எம்எல்ஏ, பள்ளி மாணவிகளை சமாதானம் செய்து இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். மேலும் விடுதி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தவும், மாணவிகளுக்கு மைதானம் வசதி, தனது சொந்த செலவில் ஏற்படுத்தி தருவேன் என தெரிவித்தார். மேலும் தரமான முறையில் உணவு சமைத்துக் கொடுக்கவும் அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.