தூத்துக்குடி அருகே ரேஷன் கடையில் ஆய்வு.. அதிகாரிகளின் பதிலால் ஆடிப்போன தவெக எம்எல்ஏ சரவணன்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்தில் ரேஷன் கடையில் தவெக எம்எல்ஏ சரவணன் ஆய்வு நடத்தினார். அப்போது பொருட்களை குறைவான எடையில் வழங்குவதாக ரேஷன் கடை பணியாளர் மீது எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டினார். அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதை கேட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி கைவிரித்ததாக கூறப்படுகிறது. இந்த பதிலை சரவணன் எம்எல்ஏ சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் பின்வாசல் பகுதியில் 4 ரேசன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணணுக்கு தகவல் கிடைத்தது.

    Advertisement

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்ட சரவணன் எம்எல்ஏ, ரேசன் கடையில் உள்ள சீனி வைக்கும் சாக்கில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடித்தாராம். இதையடுத்து அருகே இருந்த வாழவல்லான் ரேசன் கடைக்கு ஆய்வு மேற்கொண்ட சரவணன் அங்கிருந்த ரேசன் கடை அதிகாரி சந்திரபோஷிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் அந்த அரிசிக்கும் தனக்கும் எதுவும் தெரியாது என்று கூறினாராம்.

    இதற்கிடையில் ரேசன் கடையில் வழங்கும் பொருட்கள் குறைவாக உள்ளதாக புகார் வந்ததாக கூறி ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நின்ற பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சீனி, பருப்பு போன்ற பொருட்களை மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முன்னிலையில் எடை போட அறிவுறுத்தினார். எடை போட்டபோது அளவு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    Advertisement

    முதலில் மறுத்த ரேசன் கடை பணியாளர் பிறகு அங்கிருந்து வருவதே குறைவாகத்தான் வருவது என்று கூறி மழுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு நானே குறைவாகத்தான் போட்டேன் என்று ஒப்புக்கொண்டாராம்.இதையடுத்து உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.

    ஆனால் வட்ட வழங்கல் அதிகாரி அதற்கு என்னிடம் அதிகாரம் இல்லை எங்கள் உயர் அதிகாரி தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். உடனே மாவட்ட அதிகாரிக்கு போனில் தொடர்பு கொண்டு சரவணன் பேசினார்.அப்போது அந்த அதிகாரி பாதிக்கப்பட்ட நபர் யாராவது என்னிடம் வந்து புகார் அளித்தால் தான் நாங்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சரவணனிடம் தெரிவித்தார். நான் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு நடத்தி குற்றத்தை கண்டுபிடித்துள்ளேன். குற்றத்தை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    Advertisement

    இதற்கு பிறகும் மக்களை புகார் அளிக்கச் சொன்னால் எப்படி என்று சரவணன் கேள்வி எழுப்பினார். நானே புகார் தருகிறேன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நடத்திய ஆய்வு ஏரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK MLA Saravanan inspected a ration shop in Vazhavallan village, near Eral in the Srivaikuntam area of ​​Thoothukudi district. During the inspection, he accused the shop employee of distributing commodities of short weight; however, officials maintained that it was the public who needed to lodge a complaint.