தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மஞ்சள் டிசர்ட் அணிந்த காவலர் ஒருவர், போலீஸ் வாகனத்தின் மீது ஏறி, மக்களை குறிப்பார்த்து சுட்ட வீடியோ வெளியாகியிருந்தது. இந்த வீடியோவில் இருந்த காவலர் ராஜா இன்று திடீரென காலமானார்.
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் அந்த சம்பவம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு தங்களை கடுமையாக பாதிக்கிறது என்று மக்கள் நீண்ட காலமாக கூறி வந்தனர். ஆனால், அரசு இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே கோபமடைந்த மக்கள் 2018ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதாக கூறி, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கியிருந்தது. மனு கொடுக்க வந்த மக்களை.. சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுவது என்பது? எப்படி ஏற்க முடியும்? என போராட்டங்கள் வெடித்தன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகியிருந்தன. அதில், மஞ்சள் டிசர்ட் அணிந்திருந்த காவலர் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் மக்களை குறி பார்த்து நிற்பதை போலவும், துப்பாக்கியால் சுடுவதை போலவும் இருந்த வீடியோ முக்கியமான ஆதாரமாக பார்க்கப்பட்டது. விசாரணையில் இவர் தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் ராஜா என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 2003ம் ஆண்டு தலைமை காவலராக பணியில் சேர்ந்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் காவலராக பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் சட்டம் ஒழுங்கு காவல் பிரிவில் குலசேகர்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், நீண்ட நாட்களாக பணியில் சேராமல் இருந்தார். காரணம் உடல்நலப்பிரச்சனைதான். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.