அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவியதா? மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை பதிலடி!

  • தூத்துக்குடி: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், திமுக, அதிமுக தேர்தல் முடிவுக்கு பின்பாக ஆட்சி அமைக்க முயன்றது என்றும் அதற்கு பாஜக உதவியது என்றும் கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு ஒரு நன்றி கூட சொல்லாமல் அணி மாறிய காங்கிரஸை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்பி, திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பாஜக உதவியதாக விமர்சனங்களை முன்வைத்தார்.

    Advertisement

    இந்நிலையில், "திமுகவும், அதிமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாகக் கூறிய மாணிக்கம் தாகூரை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. பரிதவித்துக் கொல்லப்பட்ட செய்தியை சொல்லும்போது ஒரு காவல்துறை அதிகாரி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஒரு அமைச்சர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால் புதிய அரசாங்கம் இன்னும் அதிக விழிப்புணர்வோடு, எச்சரிக்கையோடு, மக்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் உணர்வோடு செயல்பட வேண்டும்.

    Advertisement

    மாணிக்கம் தாகூருக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சராவது என்பது உலகம் இருக்கும் வரையிலும் வாய்ப்பில்லை.

    திமுக மற்றும் மற்ற கட்சிகளின் தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாக சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன். முன்னர், பாஜக அரசு ஒரு வருடத்தில் கவிழும் என ராகுல் காந்தி பேசியிருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் பிரதமராக மோடி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.

    Advertisement

    தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றது எனக்கே பிடிக்கவில்லை என திருமாவளவனே சொல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லையென்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்திருக்கலாம். அமைச்சர் ஆகிவிட்டு, நாங்கள் இந்தக் கூட்டணியில் இருக்கிறோமா அல்லது அந்தக் கூட்டணியில் இருக்கிறோமா என எங்களுக்கே தெரியவில்லை எனச் சொல்கிறார்கள். மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் தினமும் ஆட்டம் காணும் அரசாங்கமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Congress MP Manickam Tagore had alleged that the DMK and AIADMK attempted to form a government following the election results, and that the BJP assisted them in this endeavor. Senior BJP leader Tamilisai Soundararajan has issued a sharp retort to this statement.