திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல்

  • தூத்துக்குடி: பாதிக்கப்பட்டு காவல் நிலையம் வரும் பெண்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.. மாறாக சில சமயங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் காவல் நிலையங்களில் நடந்து விடுகிறது. அப்படித்தான் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், தலைமை காவலர் ஒருவர் வாட்ஸ்அப்பில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறையைச் சேர்ந்தவர் அக்னிமுத்து. இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, அதன் பிறகு அந்தப் புகார்தாரரின் மனுவில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    அப்போது, அந்தப் பெண்ணிடம் அக்னிமுத்து ஆபாசமான வார்த்தைகளைப் பேசி, வக்கிரமான முறையில் நடந்துகொண்டதாக அந்தப் பெண் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தலைமை காவலரின் இந்தச் செயலால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்ட அந்தப் பெண், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

    அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆறுமுகநேரி தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இது தொடர்பாகத் துறை ரீதியான விரிவான விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே கடந்த மாதம், இதே ஆறுமுகநேரி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திலிபன் என்பவர், சக பெண் காவலர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்பட்ட புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்தடுத்து எழுந்துள்ள இத்தகைய குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபோன்ற புகார்களில் சிக்கினால் காவலர்களுக்கு ஏற்படும் விளைவுகள்:

    சட்ட மற்றும் துறை ரீதியான விளைவுகள்:

    பணியிடை நீக்கம் மற்றும் பணிநீக்கம்

    முதற்கட்டமாகச் செய்யப்படும் 'சஸ்பெண்ட்' நடவடிக்கை என்பது தற்காலிகமானதுதான். ஆனால், துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு முற்றிலும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அல்லது நிரந்தர பணிநீக்கம் (Dismissal) செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.

    Advertisement

    கிரிமினல் வழக்குகள்

    பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நீதிமன்றத்தையோ அல்லது உரிய சட்ட அமைப்பையோ நாடும் போது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைத்தண்டனை வரை செல்ல நேரிடும்.

    பணப்பலன்கள் இழப்பு

    கடுமையான ஒழுங்கீன நடவடிக்கையின் கீழ் பணிநீக்கம் செய்யப்படும் போது, அவர்கள் இத்தனை காலம் உழைத்துப் பெற வேண்டிய ஓய்வூதியம் (Pension) மற்றும் இதர பணப்பலன்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பறிபோகும் அபாயம் உள்ளது.

    அதேபோல் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது, அதுவரை அவர்கள் சம்பாதித்த ஒட்டுமொத்தப் பெயரும் கௌரவமும் ஒரே நாளில் சரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. "போலீஸ்" என்ற மரியாதையோடு பொதுவெளியில் வலம் வந்த ஒரு மனிதன், குற்றச்சாட்டுக்கு உள்ளான பின் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

    Advertisement

    இதைவிடக் கொடூரம், தவறு செய்தாரோ இல்லையோ, அந்தக் காவலரின் குடும்பத்தினர் மோசமாக பாதிக்கப்படுவார்கள். அதேநேரம் இதனை பழிவாங்கவும் சில பெண்கள் பயன்படுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளன. எந்த புகாரையும் முழுமையாக விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே அவர்கள் குற்றவாளியா இல்லையா என்பது உறுதியாகும். அதேநேரம் போலீசார் நடத்தும் விசாரணையில் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே இந்த புகார்களில் சஸ்பெண்ட் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் எடுக்கப்படும்.

    English Summary

    Thiruchendur: A police head constable has been suspended following a woman's complaint of alleged WhatsApp misbehavior when she visited Arumuganeri station to file a report.