தீபாவளி அதுவுமா.. பாட்டிலுக்கு 10 ரூபாய் பஞ்சாயத்து! கஸ்டமரை கத்தியால் குத்திய பார் ஊழியர்!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட அரசு மதுபான கடையில் பார் ஊழியர் மற்றும் மது குடிக்க வந்தவர் இடையே பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. பார் ஊழியர் கத்தியால் குத்தியதில் தொம்மை அந்தோணி என்பவர் குடல் வெளியே வந்து படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பட்டி சொசைட்டி பகுதியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் நேற்று பிற்பகல் தூத்துக்குடி பூபால் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை அந்தோணி என்பவர் மது குடிக்க சென்றுள்ளார்.

    Advertisement

    அப்போது காலி மது பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் வாங்குவதில் பார் ஊழியர் ஒருவருக்கும் தொம்மை அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பார் ஊழியர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தொம்மை அந்தோணியின் வயிற்றில் குத்தியுள்ளார்.

    இதில் குடல் வெளியே வந்து ரத்தம் சொட்ட சொட்ட அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளார் தொம்மை அந்தோணி. இதைத்தொடர்ந்து அங்கே மது குடித்துக்கொண்டிருந்த மற்றும் மது வாங்க வந்திருந்த நபர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காயமடைந்த தொம்மை அந்தோணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சீட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    Advertisement

    அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பார் ஊழியரை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் மது குடிக்க வந்த நபரை பார் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A customer was critically injured after a bar employee allegedly stabbed him during a ₹10 empty-bottle refund dispute in Thoothukudi.