90 கோடியில் தூத்துக்குடி பஸ் நிலையம், 130 கோடியில் தஞ்சை வணிக வளாகம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான்

  • தூத்துக்குடி: பொது-தனியார் பங்களிப்புடன் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முடிவில் இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் ரூ.90 கோடியில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி, தஞ்சையில் ரூ.130 கோடியில் பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கும் பணி ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    Advertisement

    தஞ்சை மாநகராட்சியில் ரூ.130 கோடி மதிப்பில் பல்நோக்கு வணிக வளாகமும், தூத்துக்குடி மாநகராட்சியில் போல் பேட்டை பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை ரூ.90 கோடி மதிப்பில் மறுமேம்படுத்தும் திட்டமும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த 2 திட்டங்களையும் பொது-தனியார் கூட்டுமுறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசின் திட்ட மேம்பாட்டு மானிய நிதியம் டெண்டர் கோரியிருக்கிறது.

    Advertisement

    இந்த திட்டங்களின் கீழ், தஞ்சை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு, நிதி நிலை உள்ளிட்ட அம்சங்களை ஆலோசகர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான பரிவர்த்தனை ஆலோசனை பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது ஆலோசகரின் அவசியமான பணி ஆகும்.

    இந்த இரு திட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கான ஒப்பந்த மதிப்பு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வைப்புத்தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் ஆலோசகர், திட்டங்களை பொது-தனியார் கூட்டுமுறையில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு அரசுக்கு உதவ வேண்டும்.

    Advertisement

    இந்த டெண்டர் சமர்ப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி காலை 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை வணிக வளாகமும், தூத்துக்குடி பேருந்து நிலையமும், மிக அதிக லாபம் தரக்கூடிய திட்டம் ஆகும். அத்துடன் பொது-தனியார் கூட்டுமுறை மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அரசின் நிதியாதாரத்தைச் சார்ந்து இருக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலதனத்துடன் திட்டங்கள் வேகமாகவும் தரமாகவும் நிறைவேற்றிவிட முடியும். தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகத்தை பொறுத்தவரை, ஏராளமான சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு நாள்தோறும் வருகிறார்கள். அத்துடன் தஞ்சை மாநகர மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் இந்த திட்டம் மிகவும் லாபகரமான திட்டமாக இருக்கும். கடைகள், உணவகங்கள், பார்க்கிங் கட்டணம் என பெரிய அளவில் வருவாய் ஆதாரம் கிடைக்கும்.

    Advertisement

    அதேபோல் தூத்துக்குடியில் போல்பேட்டை என்பது தூத்துக்குடியின் மிக முக்கியமான வணிக மற்றும் வர்த்தக மையப் பகுதியாக இருக்கிறது. பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் மாற்றும் போது, போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, மிகப்பெரிய அளவில் வணிகமும் வளர்ச்சி பெறும். இந்த இரண்டு திட்டங்களிலுமே அரசு நிதி எதுவும் ஒதுக்கப்போவது இல்லை.. தனியார் நிறுவனம் முதலீடு செய்து குறிப்பிட்ட ஆண்டுகள் இயக்கித் தனது முதலீட்டையும் லாபத்தை பெற்றுக்கொள்ளும். எனவே இந்த திட்டத்திற்கு போட்டி அதிகமாவே இருக்கும். சுங்கச்சாவடிகள் எப்படி செயல்படுகின்றனவோ, அதே மாடலில் தான் அரசு பல்வேறு திட்டங்களை இனி செயல்படுத்த போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The government plans to implement various projects through public-private partnerships. In this regard, the Tamil Nadu government has initiated measures to renovate the bus terminus in Thoothukudi at a cost of ₹90 crore and to construct a multi-purpose commercial complex in Thanjavur at a cost of ₹130 crore, involving private sector participation.