தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இது உள்நாட்டைக் கடந்து கேரளம் வழியாக அரபிக் கடலை நோக்கி நகரும். இதனால் தென் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று பகல் வேளையில் வெய்யிலாக இருந்த போதும், இரவில் குறிப்பிட்ட இடங்களில் தீவிரமாக மழை பெய்யும். மாலை முதல் இரவு வரை படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து அதிகாலை வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் இரவு முதல் விடிய விடிய மழை பெய்யும். அதேபோல் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்ப்யு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.