தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு.. தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொலை வழக்கில் 76 நாளில் தீர்ப்பு!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என
    போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மார்ச் 11 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், 76 நாளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு துண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.

    காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலையின் சிசிடிவி காட்சியை காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பைக் திருடுபோனது தெரியவந்தது. அந்த பைக்கை திருடிய நபர் குறித்து காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், குற்றவாளி பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் 2020 ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பிணையில் வந்த நிலையில் மீண்டும் கொடூர செயலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

    இதை தொடர்ந்து தர்ம முனீஸ்வரனை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா சாட்சிகளிடம் விசாரணை செய்து வந்தார். சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் சம்பவம் நடந்த 76 நாளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் தண்டனை விவரம் நண்பகல் 12.30 அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு துண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கடந்த ஆண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 18-ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

    இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச் சாலை வழியாகவே தூத்துக்குடி வந்து சென்றபோதுதான், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    English Summary

    In the case involving the sexual assault and murder of a Plus 2 student in the Vedanatham area of ​​Thoothukudi district, the POCSO Court has ruled that the arrested accused, Dharma Muneeswaran, is guilty. The verdict was delivered today—just 76 days after the incident occurred on March 11.