கருணைக் கடலே கந்தா போற்றி.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்!

  • தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. விழாவில் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். வரும் 6 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் தங்கியிருந்து தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கொட்டகைகளில் தங்கியுள்ளனர்.

    விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஒருபுறம் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் கோவிலுக்குச் செல்லும் முக்கியப் பாதையான சன்னதி தெருவில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் முக்கிய வழியாக சன்னதி தெரு உள்ளது. இந்தப் பகுதியில் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக, சுவாமி தரிசனம் செய்வதற்காகச் செல்லும் பக்தர்கள் வேறு வழியின்றி கழிவுநீரை மிதித்துக்கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கந்தசஷ்டி திருவிழாவின் முதல் நாளிலேயே சன்னதி தெருவில் இத்தகைய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Kanda Sashti celebrations begin at Tiruchendur temple as devotees observe six-day fasting, while sewage overflow causes inconvenience on Sannathi Street.