ரூ.100 தரிசன டிக்கெட்டில் கோல்மால்.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.25 லட்சம் மோசடி அம்பலம்!

  • தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி நடந்தது அம்பலமாகி இருக்கிறது. இதுதொடர்பான விசாரணையில் அறநிலையத்துறை பெண் ஊழியர் மேனகா என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ரூ.100 கட்டணத்திலான சிறப்புத் தரிசன ரசீதுகள் கணினி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. கோயிலின் கட்டணச் சீட்டு வழங்கும் பிரிவில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர் மேனகா. இவர் கடந்த சில மாதங்களாகப் பக்தர்களிடம் ரூ.100 பெற்றுக் கொண்டு, கட்டண ரசீதுகளை விநியோகித்துள்ளார்.

    Advertisement

    ஆனால், நாளின் இறுதியில் கோயில் கணக்கில் பணத்தைச் செலுத்தும் போது, கணினி மென்பொருளில் புகார் கூறிவிட்டு, தலா ரூ.100 என பதிவான பல ரசீதுகளை ரத்து செய்துள்ளார். சிலருக்கு ரசீது கொடுக்காமல் இருந்திருக்கிறார். இவ்வாறு போலி கணக்கு காட்டி, பக்தர்களிடம் வசூலித்த பெரும் தொகையைக் கோயில் கணக்கில் செலுத்தாமல், சொந்தப் பயன்பாட்டிற்குச் சுருட்டியுள்ளார்.

    கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த இந்த தில்லுமுல்லு மூலம் சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. கோயில் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கணினியில் பதிவான ரசீதுகளின் எண்ணிக்கைக்கும், வசூலான பணத்திற்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

    Advertisement

    இந்த மோசடி குறித்துத் திருக்கோயில் இணை ஆணையர் லலிதா முன்னிலையில் அவசர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஊழியர் மேனகா திட்டமிட்டு இந்த முறைகேட்டைச் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ரூ.25 லட்சம் போன்ற ஒரு பெரிய தொகையைக் கோயிலின் கணினி மென்பொருளைப் பயன்படுத்தித் தனியாக ஒரு தற்காலிக ஊழியர் மட்டுமே இவ்வளவு காலம் ஏமாற்றியிருக்க முடியாது எனப் பக்தர்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் அல்லது கணினிப் பிரிவைக் கண்காணிக்கும் முக்கியப் புள்ளிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும், மேலும் எவ்வளவு காலமாக இந்த கொள்ளை நடந்து வருகிறது என்பது குறித்தும் விரிவான துறை ரீதியான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    English Summary

    Tiruchendur Temple Fraud: HR and CE Staff Suspended Over Alleged Rs.25 Lakh Misappropriation in Rs.100 Darshan Tickets