தூத்துக்குடி: தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற இளைஞர் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக வைத்திருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தூத்துக்குடி போலீசார் வீடியோ வெளியிட்டு மறுத்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி விசாரணைக்காக தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாக சிகிச்சையில் இருக்கும்போது அருணாச்சலம் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் நடத்தும் உறவினர்களுடன் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி அமுதாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலத்துக்கு 26 வயது ஆகிறது. இவர் கடந்த 17ம் தேதி அன்று தூத்துக்குடி எப்.சி.ஐ. குடோன் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்டு அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறாக்ள் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அருணாச்சலம் விசாரணையின் போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில் உயிரிழந்த அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதாக கூறியுள்ளார்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சூழலில் காவல்துறையினர் பிடிபட்ட அன்று தென்பாவும் காவல் நிலையத்தில் அருணாச்சலம் திருடன் இருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை மொத்தமாக அடுக்கி வைத்து அதன் அருகிலேயே அருணாச்சலத்தை முழுவதுமாக பரிசோதித்துள்ளனர்/ அப்போது அவர் மீது எந்த விதமான காயங்களும் இல்லை எனவும் எனவே முட்டுச்சந்தில் வைத்து தன்னை தாக்கியதாக கூறுவது அனைத்தும் தவறான தகவல் எனவும் காவல்துறையினர் வீடியோ வெளியிட்டு தங்களது தரப்பு ஆதாரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.