தூத்துக்குடி: தூத்துக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் ஆய்வு செய்தார். அப்போது ஓய்வில் இருந்த மருத்துவரை எழுப்பி, வரவழைத்து, 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய பணி உங்களுடையது. இதுபோன்ற பணியில் மருத்துவர் உரிய நேரத்தில் இல்லாமல் இருந்தால் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 24 மணி நேர பணியை ரத்து செய்துவிட்டு மருத்துவர்களுக்கு ஷிப்ட் முறை கொண்டுவர வேண்டும் என்று அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கம் குரல் எழுப்பி உள்ளது.
அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், " 24 மணி நேர பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை எந்த அரசாணையும் வெளியிடவில்லை. தூத்துக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் தனது பணி அறையில் தங்கியிருந்தபோது, வந்த செவிலியரின் தொலைபேசி அழைப்பை ஏற்று மருத்துவர் வந்துள்ளார். நோயாளி எவரும் இல்லாததால் அவருடைய பணி அறையை மூடி உள்பக்கம் தாழிட்டு ஓய்வில் இருந்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு உள்ள 24 மணி நேர பணி முறையை ரத்து செய்து, உடனடியாக ஷிப்ட் முறையை கொண்டுவர வேண்டும்.
ஏரல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியில் இருந்த மருத்துவரை, பொதுவெளியில் குற்றம்சாட்டும் வகையில் மக்கள் பிரதிநிதி ஒருவரே தவறாக சித்தரித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவசரநிலைகளில் பணி மருத்துவர் உடனடியாக பணிக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், ஒதுக்கப்பட்ட பணியாளர் ஓய்வு அறையில் ஓய்வெடுப்பது அலட்சியம் அல்ல. அதனால், மருத்துவர்களுக்கு ஷிப்ட் பணியை நடைமுறைப்படுத்த தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அரசாணை 113-ல் குறைபாடு: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் (டிஎம்எஸ்) கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை உருவாக்காமல், மருத்துவர்களை மாற்று நிரவல் செய்யும் வகையில் அரசாணை 113 வெளியிடப்பட்டுள்ளது. இதனால், 70 சதவீத அரசு மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை, சிறப்பு சேவைகளின் அடிப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்தும் நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு அரசாணை 113-ல் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அங்கு மருத்துவர் தனது அறையில் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அவரை செவிலயரின் செல்போன் மூலம் அழைத்து, வெளியே வரவைத்த அன்னை சரவணன், அவருக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துக்களை தெரிவித்தனர். நெட்டிசன்கள் அப்போது வெளியிட்ட பதிவில், "பணியில் இருக்கும் மருத்துவர் மருத்துவமனையின் இரவுக்காவலர் அல்ல. நோயாளிகள் யாரும் காத்திருக்கவில்லை என்றால், அவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருப்பார். நோயாளி ஒருவர் வரும்போது, செவிலியரோ அல்லது பிற பணியாளர்களோ கதவைத் தட்டியோ அல்லது அழைத்தோ அவரை எழுப்புவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. தயவுசெய்து இந்த சட்டமன்ற உறுப்பினரிடம் இதைத் தெரிவியுங்கள்" என்று கூறியிருந்தார்கள். திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் வெளியிட்ட பதிவில், "கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இரவுப் பணியில் உள்ள மருத்துவரின் பணி மற்றும் பொறுப்புகளில் டி.வி.கே எம்.எல்.ஏ தலையிட்டது முற்றிலும் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசியல் தலையீட்டிற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பிற மருத்துவர் சங்கங்கள் வலுவான அறிக்கையை வெளியிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதையடுத்து அரசுமருத்துவர்கள் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.என்ன நடந்தது