திமுகவில் இணைய ரூ.50 கோடி வரை பேசினார்கள்.. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பகீர்! ஆடியோவும் வெளியிட்டார்

  • தூத்துக்குடி: திமுகவில் சேர சொல்லி 4 பேர் என்னிடம் பேரம் பேசினர் என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், ஒன்று இங்கு வந்துவிடு. இல்லையென்றால் அழிச்சிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மையை பெறுவதற்காக தவெக, அதிமுக எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் செய்து ராஜினாமா செய்ய வைத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    Advertisement

    மேலும் ஒரு எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

    இதற்கு மத்தியில், தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம் நடப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ., இளையராஜாவிடம் ரூ.35கோடி பேரம் பேசியதாக சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, மேடவாக்கம் தியாகராஜன், திருச்சி நரேஷ், கரூர் ரமேஷ், கார்த்தி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே பேரம் பேசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் ஆஜராகத நிலையில் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு தவெக எம்.எல்.ஏ தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

    Advertisement

    திமுகவிற்கு வந்துவிடுங்கள் என பேரம் பேசினர்

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் இன்று ஏரலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மற்றும் நெல்லையை சேர்ந்த தியேட்டர் அதிபர் ஒருவர் தன்னிடம் பேரம் பேசியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சரவணன் எம்.எல்.ஏ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிறைய நபர்கள் என்னிடம் நேரடியாக ரூ.30 கோடி, ரூ.50 கோடி அல்லது 100 கோடி தருகிறேன். திமுகவிற்கு வந்துவிடுங்கள்.. இல்லையென்றால் இப்படித்தான் நாங்கள் செய்வோம். இது தென்மாவட்ட அரசியல். தமிழ்நாட்டில் 100 பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 60 சதவீதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். அதனால் நீங்க ஏழ்மை நிலையில் இருந்து வந்து இருக்கீங்க..

    Advertisement

    ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார்

    பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் பக்கம் இருக்கும் 4 பேர் என்னிடம் பேசியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் உள்ளது. ஒன்று இங்கு வந்துவிடு. இல்லையென்றால் அழிச்சிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் குதிரை பேரம் என்று அடிச்சி விடுகிறார். அப்போது நீங்கள் செய்வது என்ன? நீங்கள் வாய்மொழியாக பொய் சொல்கிறீர்கள்.

    ஆனால் என்னிடம் ஆதாரம் உள்ளது. எம்.எல்.ஏ குடியிருப்புக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். வண்டியில் போனால் லாரியை வைத்து அடித்துவிடுவோம் என்று கூறினார்கள்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், பேரம் பேசியதாக கூறி ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் அளித்த இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK MLA Saravanan alleged that he was offered up to ₹50 crore to join the DMK. He released an audio recording and a photograph of the person who allegedly approached him. Saravanan also claimed he has been receiving threats after refusing the alleged offer.