ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ளது அநீதி.. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தவெக எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ஒருவரை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி ராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்ற அதே கட்சியை சேர்ந்த பாலா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் என இருவரும் சேர்ந்து தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்யப்பட்டதாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.

    Advertisement

    அதன் பேரில் விசாரணை நடத்திய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் இந்த விவகாரம் எம்எல்ஏ சரவணனுக்கு தெரிந்து இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தனது கட்சியை சேர்ந்த நபர் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகியான பாலா என்பவரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாகவும், எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பல இடங்களில் கடன் இருந்ததாகவும் தெரிவித்த எம்எல்ஏ சரவணன், இந்த விவகாரத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை பின்னிருந்து இயக்குகிறார் எனவும், இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் பேட்டியளித்துள்ளார்.

    Advertisement

    இந்தசூழலில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.

    அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.

    Advertisement

    இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.

    இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சனை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த சோபா மாடல் அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.

    குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.

    Advertisement

    ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?

    ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin demands the expulsion of Srivaikuntam TVK MLA Saravanan from the party