இனிமேல் விடமாட்டேன்.. நேரடியாக சிறைக்கே சென்று சம்பவம் செய்த உதயநிதி.. மார்க்கண்டேயனுடன் மீட்டிங்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

    Advertisement

    கட்சிக்குள் எழுந்த தீவிர விமர்சனங்களுக்கும் தொண்டர்களின் கொந்தளிப்பிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

    Advertisement

    கைதும் பின்னணியும்

    கடந்த ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வரான சி. ஜோசப் விஜய்க்கு எதிராக மார்க்கண்டேயன் கடுமையாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முக்கியமாக முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என்று கூறியது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து, தவெக நிர்வாகி பி. காசிராம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜூலை 20 அன்று அதிகாலை மார்க்கண்டேயனை அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

    சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு முன்பாக பேரவை சபாநாயகரின் முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறி மார்க்கண்டேயன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    திமுகவுக்குள் புகையும் அதிருப்தி

    மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் உடனே வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர்களும் உள்ளூர் தலைவர்களும் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டபோதிலும், கட்சியின் மாநில தலைமை ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் சற்று எச்சரிக்கையான அணுகுமுறையையே கையாண்டதாகக் கூறப்படுகிறது.

    ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து களத்தில் நின்று போராடும் நிர்வாகிகளுக்கு, தலைமை உடனடியாக நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. களத்தில் நின்று ஆளுங்கட்சியை எதிர்கொள்ளும் எம்எல்ஏவுக்கு கட்சி தலைமை உடனடியாக நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க வேண்டாமா? என்ற கேள்விகள் திமுகவின் உள்வட்டாரங்களிலும், தென் மண்டல அரசியல் தளத்திலும் வலுவாக எதிரொலித்தன.. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக பலத்த விவாதங்கள் கிளம்பின.

    Advertisement

    பாளையங்கோட்டையில் உதயநிதியின் என்ட்ரி

    கட்சிக்குள் தலைமை மீது அழுத்தம் அதிகரித்த நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு விரைந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், கட்சி உங்களோடு உறுதியாக நிற்கிறது.. எந்தவித அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் திமுக அஞ்சாது.. என்று ஆறுதலும் தைரியமும் கூறினார்.

    சிறை சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஜனநாயக ரீதியாக கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளின் குரலை நசுக்கவே இத்தகைய கைது நடவடிக்கைகள் பாய்கின்றன என்று குற்றம்சாட்டினார். சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த வழக்கை தீவிரமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

    Advertisement

    மாறும் அரசியல் சூழல்

    உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடிச் சந்திப்பு, திமுக தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் எழுந்த தயக்கத்தை உடைத்து, தலைமை இப்போது களத்தில் இறங்கியிருப்பது, தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

    அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சந்தித்ததன் மூலம், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுக்கும் என்பது தெளிவாகிறது.

    English Summary

    Udhayanidhi Stalin Meets DMK MLA Markandeyan in Palayamkottai Jail