விஜய் ஒரு நாள் சிறைக்கு போவார்.. எலும்பை உடைப்பேன்னு சொன்னப்போ ஜெயிலில் போட்டீங்களே.. மார்க்கண்டேயன்

  • சென்னை: முதல்வர் விஜய்யும் ஒரு நாள் சிறைக்கு போவார்.. அதனை நாங்க நிறைவேற்றி காண்பிப்போம் என விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். மேலும் கூறிய அவர், "ஏன்ய்யா, நான் எலும்பை உடைப்பேன் என்று சொன்னா உடனே என்னை பிடிச்சு ஜெயிலில் போட்டீங்களே.. இப்போ என் தலைவரை தாடையை உடைச்சாங்க என்று சொல்லி சைகையை காண்பிக்கிறீங்களே.. இதுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க யாரும் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து இன்று திமுக சார்பில் தமிழகம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைநகரங்களில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது:-

    Advertisement

    நீயும் ஒரு நாள் சிறைக்கு போவாய்

    தூத்துக்குடி மக்களை நான் பரிதாபமாக பார்க்கிறேன். பண்பட்ட மக்கள்.. கடலோடிகளாகவும்.. இங்க இருக்கக் கூடிய உப்பள தொழிலாளியாகவும்.. இருக்கின்ற தொழில் நகரத்தை தூக்கி உயர்த்திப் பிடித்த இந்த மக்கள், வாக்குகளை கொடுக்கும் போது நீங்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டீர்கள். உங்கள் ஏமாற்றத்தை தீர்ப்பதற்கு, என் தலைவன்.. மிசா கால கதாநாயகன்.. இந்த நாட்டு மக்களுக்காக சுதந்திரத்தின் ஜனநாயகத்தை காப்பதற்காக தன்னயே கொடுத்த தலைவன்..

    நம் நாட்டில் எத்தனையோ விடுதலை போராட்ட வீரர்கள் சுதந்திரத்தினை பெற்று கொடுத்தார்கள். சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தை ஒழிப்பதற்காக தாடையை உடைப்பதற்கு சைகை காட்டுகிறார் என்றால், நான் கேட்கிறேன்.. ஏன்ய்யா, நான் எலும்பை உடைப்பேன் என்று சொன்னா உடனே என்னை பிடிச்சு ஜெயிலில் போட்டீங்களே.. இப்போ என் தலைவரை தாடையை உடைச்சாங்க என்று சொல்லி சைகையை காண்பிக்கிறீங்களே.. இதுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க யாரும் இல்லையா.. நீயும் ஒரு நாள் சிறைக்கு போவாய்.. அதை நாங்கள் நிறைவேற்றி காண்பிப்போம்" என்று பேசினார்.

    Advertisement

    எலும்பை உடைப்பேன்

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, "முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கதவை மூடினால் அவரது எலும்பை உடைப்பேன்" என்று ஆவேசமாக பேசினார். இது தொடர்பாக தவெகவினர் அளித்த புகாரின் பேரில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    அப்போது அவர் பேசுகையில், 'சிறையில் அடைத்ததால் என்னுடைய கருத்துகளை மடக்கி விட முடியும், ஒடுக்கிவிட முடியும் என்று நினைத்தால் 1,000 சிறைச்சாலைகளை சந்திப்பதற்கு திமுகவினர் தயாராக இருக்கின்றனர். இன்று சட்டத்தை இயற்றக்கூடிய, சட்டத்தை பேசக்கூடிய கருத்துரிமைகளை பேசக்கூடிய எம்.எல்.ஏ எந்த வித காரணமும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    Advertisement

    சிறைச்சாலை முக்தி தருகிற இடம்

    ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக கடுமையான விளைவுகளை நம் தலைவர்கள் சிறையில் சந்தித்தார்கள். மிசா காலத்த்தில் சந்தித்தனர். இந்தி எதிர்ப்பில் சந்தித்தார்கள். இப்போது ரீல்ஸ் ஆட்சியும், சினிமா கொடுமையும் கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். ஜனநாயக கடமையை திமுக ஆற்றும்.

    ரீல்ஸ்களால் முதல்வராக வந்துவிட்டார். ரியல் முதல்வராக இருக்கும் அளவுக்கு விஜய் பக்குவமாக பேசி கற்றுக் கொண்டால் தான் எல்லாம் சரியாக இருக்கும். சிறையில் எத்தனை வருஷம் இருந்தாலும் ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றுவோம். சிறைச்சாலை என்பது திமுகவிற்கு முக்தி தருகிற இடம்" என பேசியிருந்தார்.

    English Summary

    Markandeyan, the DMK MLA for the Vilathikulam constituency, has stated that "Chief Minister Vijay" will also go to jail one day, and that they will ensure this happens. He further questioned, "Look here—when I said I would break bones, you immediately arrested and jailed me. Now, you are gesturing to show that my leader's jaw was broken; is there no one to file a complaint about that?"