சும்மா ஜாலியா பாடி ஷேமிங்.. கோவில்பட்டி கடையில் தேடி வந்து இறங்கிய கோடரி.. 3 குழந்தைகளின் தந்தையாம்

  • தூத்துக்குடி: தூத்துக்குடியில், சாதாரணமாக நண்பர்கள் கேலி செய்து கொள்கிறார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், அந்தக் கேலி ஒருவரின் மனதில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், இப்போது இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது..!!

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

    Advertisement

    தூத்துக்குடி கோவில்பட்டி

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் சந்தையில் உள்ள காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்ததார்.. அப்போது அதே தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை திடீரென அங்கு வந்துள்ளார்.

    திடீரென கோடரியால் காளிராஜைப் பலமாக வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்த அவர், அங்கிருந்து நேராகச் சென்று கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இதையடுத்து, கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸார், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த காளிராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    சின்னதுரையிடம் விசாரணை

    இதனிடையே, , தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சின்னத்துரையிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான். இந்த கொலை குறித்த உண்மை வெளியே வந்தது.

    காளிராஜும் சின்னத்துரையும் ஒரே தினசரி சந்தையில் வேலை பார்த்து வருபவர்களாம்.. இருவருக்கும் இடையே அடிக்கடி சின்ன சின்ன தகராறுகள் ஏற்படுமாம்.. குறிப்பாக காளிராஜ், சின்னத்துரையை அடிக்கடி உருவக் கேலி செய்வாராம்.. இது சின்னதுரைக்கு கோபத்தை ஏற்படுத்தி வந்தள்ளது.. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் வந்துபோயுள்ளது.. இப்படி வாக்குவாதம் ஏற்பட்டபோதெல்லாம் சக தொழிலாளர்கள் தலையிட்டு இவர்களை சமாதானப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

    Advertisement

    உருவ கேலி டார்ச்சர்

    இந்நிலையில், கடந்த 24-ம் தேதியும் இருவருக்கும் இடையே இதேபோல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காளிராஜ் சின்னத்துரையைக் கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உருவக் கேலியால் மனக்கசப்பில் இருந்த சின்னத்துரை, சந்தையில் மற்ற தொழிலாளர்கள் எல்லார் முன்னிலையில் கீழே தள்ளித் தாக்கப்பட்டதால் மேலும் அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் சின்னத்துரை, காளிராஜை கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இருந்தாலும் உருவக் கேலி மற்றும் தாக்குதல் சம்பவங்கள்தான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதாவது பின்னணி உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாதாரண பேச்சு - ஆறாத காயம்

    கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், காளிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தினசரி சந்தையில் சக தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்டுவந்த சாதாரண கிண்டல், கேலி மற்றும் வாக்குவாதம், இறுதியில் கொலையில் முடிந்திருக்கலாம் என்ற சந்தேகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    ஒருவரின் உருவத்தைக் கேலி செய்வது அவர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தலாம்.. விளையாட்டாக சொல்வதாக நினைத்தாலும், அது மற்றவர்களுக்கு எவ்வளவு வேதனையைத் தரும் என்பதை உணர வேண்டும்... பாடி ஷேமிங் எனப்படும் உருவக் கேலி செய்வது அநாகரீகம் என்பதைக்கூட உணராமல் சிலர் இன்னமும் இருப்பது கவலையை தருகிறது...!!

    English Summary

    Was Body Shaming the Reason Behind the Kovilpatti Market Incident Involving a Father of Three?