திருச்செந்தூர் ஆடி அமாவாசை பிரம்மிப்பு! 100 அடி உள்வாங்கிய கடல்.. தூத்துக்குடி பாறை வெளியே தெரியுதே?

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மண்ணில் ஆடி அமாவாசை தினத்தில் அரங்கேறிய இந்த சம்பவம், முருக பக்தர்களை ஒருகணம் சிலிர்க்க செய்திருக்கிறது! விடிந்ததும் விடியாததுமாகப் புனித நீராட கரைக்கு வந்த மக்களுக்கு, கடற்கரையில் காத்துக் கொண்டிருந்தது பேரதிர்ச்சி அல்ல... பேரதிசயம் என்றே சொல்லலாம். திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கியிருக்கிறது கடல்... இதற்கு என்ன காரணம்? அறிவியல் என்ன சொல்கிறது?

    Advertisement

    தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், ஆடி அமாவாசையான நேற்று அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

    Advertisement

    திருச்செந்தூர் கடல்

    தங்கள் முன்னோர்களின் ஆசியைப் பெற பிதுர் தர்ப்பணம் கொடுத்து, கடலில் மூழ்கி எழுந்திருக்க பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது திருக்கோவில் வளாகத்தில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான பரந்த கடற்கரை பகுதியில், கடல் நீர் திடீரெனப் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது!

    கடல் நீர் கிட்டத்தட்ட 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. நீர் விலகியதும், பல ஆண்டுகளாக ஆழ்கடலுக்குள் மறைந்திருந்த பச்சைப் பாசி படர்ந்த பாறைகளும் பாறைத் திட்டுகளும் சட்டென வெளியே தெரியத் தொடங்கின.

    100 அடி உள்வாங்கிய கடல் நீர்

    பொதுவாக கடல் உள்வாங்கினால் சுனாமி வந்துவிடுமோ என்று மக்கள் அலறியடித்து ஓடுவார்கள். ஆனால், திருச்செந்தூர் கடற்கரையிலோ காட்சியே வேறு!

    Advertisement

    கரையிலிருந்த பக்தர்கள் எந்தவிதமான பயமும் அச்சமும் இல்லாமல் ஆச்சரியத்துடன் கடலுக்குள் இறங்கி வழக்கம்போல் புனித நீராடினார்கள்.. அதுமட்டுமல்ல, வெளியே தெரிந்த அந்தப் பாசி படர்ந்த பாறைகள் மீது போட்டி போட்டுக்கொண்டு ஏறி நின்று, தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.. இதனை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்..

    ஆடி அமாவாசை சம்பவம்

    உண்மையில் திருச்செந்தூர் மண்ணில் இது புதிதல்ல! அமாவாசை, பௌர்ணமி மட்டுமல்லாமல் அஷ்டமி, நவமி போன்ற திதி நாட்களிலும், அதனை ஒட்டிய தினங்களிலும் காலையில் கடல் நீர் உள்வாங்குவதும், பிற்பகலில் அல்லது மாலையில் மீண்டும் தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இங்கு காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான்.

    Advertisement

    இருந்தாலும் நூறு அடி தூரத்திற்கு பின்வாங்கியதில் அறிவியல் பின்னணியும் உள்ளது.. இதுகுறித்த உண்மையை உடைத்து சொல்கிறார் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறை உதவி பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான செல்வம்.

    அறிவியல் என்ன சொல்கிறது

    சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் வேகம், உயரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழக்கமாக கடல் மட்டம் குறைவதும், உயர்வதும் இயல்பாக உள்ளது.

    அதேபோல இந்த மாவட்டக் கடற்கரை நில அமைப்பானது மிகவும் மேடான பகுதியாகும். மேலும் ஒரு முனை போல கடலுக்குள் நீட்டிக்கொண்டிருப்பதால், கடல் நீர் அந்தப் பகுதியைச் சுற்றி உள்வளைந்து செல்லும். இதனுடன் காலநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் வேகமும் உயரமும் மாறுபடுகிறது.

    Advertisement

    கடல் நீர் உள்வளைந்து செல்லும்

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஏற்படும் இயற்கையான ஈர்ப்பு விசையால் கடல் நீர்மட்டம் குறையும் போது, கடற்கரையின் மேடான பகுதிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இதுவே கடல் மிக நீண்ட தூரம் உள்வாங்கியது போன்ற தோற்றத்தை நமக்குத் தருகிறது. இது முற்றிலும் இயற்கையான நிகழ்வே தவிர பயப்படத் தேவையில்லை" என்று விளக்கம் தந்துள்ளார்.

    ஆனால் நேற்று அதிகாலையில் உள்வாங்கிய கடல் நீர், மாலையில் மீண்டும் அமைதியாகத் தனது பழைய இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. எனினும், இந்த அரிய நிகழ்வு தொடர்பான காட்சிகளும் ட்ரோன் பதிவுகளும் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வியப்பை தந்து கொண்டிருக்கிறது. .

    English Summary

    Do You Know Why Thiruchendur Sea Receded 100 Feet on Aadi Amavasai? Why Did Rocks Appear There?