14 அடி மலைப்பாம்பு குரங்கை விழுங்க முயல.. வேலூர் மாந்தோப்பில் கூச்சலிட்ட குரங்குகள்.. உறைந்த விவசாயிகள்


  • வேலூர்: வேலூர் மாவட்டத்தின் எல்லையோர கிராமப்பகுதி ஒன்றில் விவசாயிகளை உறையவைக்கும் நள்ளிரவு நேரக் காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அமைதியான அந்தப் பகுதியில் திடீரென எழுந்த விலங்கினங்களின் அசாதாரணக் கூச்சலால் அப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாகத் திடுக்கிட்டுப் போயினர். என்ன ஏதென்று அறியாமல் ஓடிவந்து பார்த்த விவசாயிகளுக்கு அங்கே ஒரு மிரளவைக்கும் பேராபத்து 14 அடி நீள மலைப்பாம்பு ரூபத்தில் காத்திருந்தது.

    Advertisement

    வேலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக விஷப் பாம்புகள் மற்றும் ராட்சத மலைப்பாம்புகள் மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது தொடர்ந்து பதிவாகி வருகிறது.

    Advertisement

    காடுகளையொட்டிய பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து இரை தேடி வரும் இந்த ஊர்வன, பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் ஒருவித பதற்றமான சூழலையும் உருவாக்கி விடுகின்றன. வனப்பகுதிகளின் எல்லை சுருங்குவதும், கோடை வெப்பத்தின் தாக்கமும் தான் இத்தகைய காட்டுயிர்கள் ஊருக்குள் படையெடுப்பதற்கு மிக முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

    பேர்ணாம்பட்டு மாந்தோப்பு

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் திடீரென ஒரு பாம்பு புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

    தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மிக முக்கியமான அரசு அலுவலகமான அங்கு, எதிர்பாராத விதமாகப் பாம்பு நடமாடுவதைக் கண்டதும் பணியில் இருந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    பயத்தில் அலறியடித்தபடி அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் சலசலப்பும், கட்டுக்கடங்காத பதற்றமும் நிலவியது. பின்னர் அந்தப் பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    குரங்கை விழுங்க முயன்ற பாம்பு

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது.

    பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருணாமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில், வியாழக்கிழமை மாலை நேரத்தில் குரங்குகள் கூட்டமாகச் சுற்றித் திரிந்துள்ளன. அப்போது இரை தேடி அங்கு வந்த சுமார் 14 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட மலைப்பாம்பு, அங்கிருந்த ஒரு குரங்கைப் பிடித்து, தன் உடலால் மிகக் கொடூரமான முறையில் இறுக்கிக் கொன்றுள்ளது. மேலும் அந்த குரங்கை விழுங்கி கொண்டும் இருந்தது..

    Advertisement


    14 அடி நீள மலைப்பாம்பு

    இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த விவசாயிகள், உடனடியாகப் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் மோகனவேலுவுக்குத் தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அந்த 14 அடி நீள மலைப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். மேலும், உயிரிழந்த குரங்கின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வன ஓய்வு விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

    சமீபத்தில் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி வி.கோட்டா சாலையில் நள்ளிரவில் சுமார் 15 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று திடீரென சாலையைக் கடந்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    வேலூரில் அடுத்தடுத்து மலைப்பாம்பு

    ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் இந்த முக்கியச் சாலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென மிரளவைக்கும் வகையில் ஊர்ந்து வந்த இந்த மலைப்பாம்பைக் கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, அச்சத்துடன் வாகனங்களை நிறுத்திய ஓட்டிகள், அந்த ராட்சத பாம்பு சாலையை முழுமையாகக் கடந்து அருகில் இருந்த புதருக்குள் செல்லும் வரை சாலையிலேயே காத்திருந்து, பின்னர் தங்களது பயணத்தைத் தொடர்ந்தது நினைவிருக்கலாம். வேலூர் மாவட்டத்தில் இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த சம்பவங்கள் மாவட்ட மக்களைத் தொடர் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

    Topics: #vellore news

    English Summary

    14-Foot Python Tries to Swallow a Monkey.. Monkeys Scream in Panic as Shocked Farmers Watch in Vellore Grove