சக்கர நாற்காலியில் அமர்ந்த தாயை ஓடும் ரயில் முன் தள்ளிய கொடூர மகன்.. அரண்டு போன அரக்கோணம் போலீஸ்

  • வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே போலீசார் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. இரவு சுமார் 8.55 மணிக்கு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தை கடந்து சென்றது. அப்போது, ரயில் நெருங்கி வந்த வேகம் பார்த்து, இப்படியொரு காரியத்தை மகன் செய்துவிட்டார்.. கடைசி நிமிடம்வரை தன் மகன் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார் அந்த பரிதாபத்தாய்..!!

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி.. இவருக்கு 70 வயதாகிறது.. இவரது கணவர் சேஷாத்திரி ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.. அதனால் பத்மாவதி தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பத்மாவதியின் 2வது மகனான பார்த்தசாரதி (43) என்பவரோடு அவர் வசித்து வந்தார்.

    பத்மாவதி உடல்நலக் கோளாறு

    காலத்தின் கோலம் முதிய வயதில் பத்மாவதியை படுத்த படுக்கையாக்கியது. உடல் உறுப்புகள் அத்தனையும் செயலிழந்த நிலையில், சாதாரணமாக கூட நடக்க முடியாத அளவுக்கு பத்மாவதி தள்ளப்பட்டார்.. இதனால் தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்த்தசாரதிக்கு வந்தது..

    ஆனால், நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்தது.. இதனால் பத்மாவதியை வைத்து பார்ப்பதில், வீட்டில் கடுமையான சிக்கல்களும் எழுந்தன. முக்கியமாக பார்த்தசாரதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறுகள் வெடித்தன.

    Advertisement

    மாமியாரை வீட்டில் வைத்து பார்த்து கொள்வதில், மருமகளுக்கு விருப்பமில்லை.. ஒருபக்கம் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல், இன்னொருபக்கம் தாயின் நோயும் தீவிரமடைவதால், பார்த்தசாரதி நிலைகுலைந்து போனார்.. இதன் உச்சக்கட்டமாக , 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.

    விழி பிதுங்கிய மகன்

    குடும்பத்தை சுமக்க வேண்டிய மொத்த பாரமும் பார்த்தசாரதிக்கு விழுந்தது.. படுக்கையை விட்டு எழ முடியாத அம்மாவுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டிய நிலைமைக்கும் ஆளானார்.. அம்மாவை கவனித்து கொள்வது, அவருக்கு மிகப்பெரிய சுமையாகவே மாறிவிட்டது.

    Advertisement

    இதனால் வழியறியாமல் தவித்த பார்த்தசாரதி நேற்று ஒரு விபரீதமான முடிவை எடுத்தார். படுத்த படுக்கையாகவே நாட்களை கழித்து வந்த பத்மாவதியிடம், "அம்மா, உங்களை வெளியே அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்லி உள்ளார்..

    இதைக்கேட்டு பத்மாவதி பூரித்து போனார்.. பல மாதங்களாக நான்கு சுவற்றுக்குள் முடங்கிக்கிடந்த அந்தத் தாய்க்கு, தன் மகன் தன்னை வெளியில் அழைத்து செல்ல போகிறான் என்ற வார்த்தை மகிழ்ச்சியை தந்தது.

    வீல் சேருடன் தள்ளிய மகன்

    வீல்சேரில் அம்மாவை உட்கார வைத்து தள்ளிக்கொண்டு பார்த்தசாரதி, மணவூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார்.. பிறகு வீல்சேரிலேயே நடைமேடைக்கும் அழைத்து சென்றார்.

    Advertisement

    இரவு சுமார் 8.55 மணிக்கு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தை கடந்து சென்றது. அப்போது, ரயில் நெருங்கி வந்த வேகம் பார்த்து, வீல் சேரில் உட்கார்ந்திருந்த அம்மாவை, தண்டவாளத்தில் தள்ளிவிட்டார் பார்த்தசாரதி... சில நொடிகளில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி அந்த தாய் பரிதாபமாக உயிரை விட்டார்.

    மறுநாள் காலை ரயில்வே போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியபோது, தண்டவாளத்தின் அருகே நொறுங்கிக்கிடந்த சக்கர நாற்காலியை பார்த்து சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீல்சேரில் தன் அம்மாவை பார்த்தசாரதி அழைத்து வருவதையும், பிறகு சக்கர நாற்காலியோடு ஓடும் ரயில் முன்பு தள்ளி விட்டதையும் கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்..

    Advertisement

    கண்களை குளமாகும் சோகம்

    தன் தாயை பாசத்தோடு வெளியே கூட்டிச் செல்வது போல் நடித்து, சக்கர நாற்காலியோடு ஓடும் ரயில் முன் தள்ளிய இந்த பகீர் காட்சி அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது.

    மகனுக்கு சுமையாகிவிட்டதே என்றுகூட அறியாமல், கடைசி நேரத்தில் நம்பிக்கையும், புன்னகையுமாய் வீல்சேரில் உட்கார்ந்த அந்தத் தாயின் ஆசை, பெற்ற மகனாலேயே ரத்தக் கண்ணீரில் முடிந்துபோனது நெஞ்சை உறைய வைக்கும் சோகம்...!!!

    English Summary

    Arakkonam Son Pushes Mother in Wheelchair in Front of Moving Train.. Police Shocked