டேபிளில் 3 Files! ஒரு வாரத்தில் ஓபன் செய்யாவிட்டால்! விஜய்க்கு எதிராக உரிமை மீறல்! துரைமுருகன்

  • வேலூர்: ஒரு வாரத்திற்குள் 3 கோப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் விஜய் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தனது மேஜையில் இருப்பதாக கூறிய மூன்று கோப்புகளையும் முதல்வர் விஜய் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்.

    Advertisement

    இல்லாவிட்டால் சட்டசபையில் தவறான தகவலை கூறியதாக முதல்வர் மீது உரிமை மீறல் தீர்மானம் (Privilege motion) கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறியிருப்பதாவது: வரும் நாட்களில் திமுக சட்டசபைக்கு வராது என்றும் அவர்களால் தேர்தலில் இனி வெல்ல முடியாது என்றும் தவெக உறுப்பினர்கள் அவையில் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

    யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு பிறகு யாரும் வர மாட்டார்கள் என்றுதான் சொல்வார்கள். இப்படித்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூறினார்கள். ஆனால் நாங்கள் அவர்களையும் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளோம். நாங்களும் இப்படி கூறினோம். எங்களையும் அவர்கள் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல.

    Advertisement

    ஊரான் விட்டு நெய்யில் யாருக்கு ஸ்வீட் செய்கிறீர்கள் என்றும், எதற்கெடுத்தாலும் நிதி இல்லை என சொல்ல நீங்கள் எதற்கு என தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார்.

    தற்போது எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த செய்தியை பார்த்தவுடன் நான் கூட பரவாயில்லை என முதலில் நினைத்தேன். ஆனால் அதற்கு பிறகு பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்த பிறகு, கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளார்கள். கார் வேண்டும் என கேட்டவர்களுக்கு 3 கார்கள் உள்ளனவாம், அதையும் நான் தெரிந்து கொண்டேன்.

    Advertisement

    எனவே கார் வைத்துள்ளவர்களுக்கு கார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் மக்களின் எண்ணமாக இருக்கிறது. திமுகவை பொருத்தமட்டில் கார் இருக்கோ இல்லையோ எங்களுக்கு வேண்டாம் என சொல்லிவிட்டோம்.

    நிதி இல்லை, கஜானாவை திமுக காலி செய்துவிட்டது என விஜய் குற்றம்சாட்டும் போது எப்படி கார் கொடுக்க முடியும், ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்க முடியும். தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது நியாயமானதுதானே!

    சபாநாயகர் நீண்ட காலம் பேரவையில் இருந்தவர். அவர் ஓரளவுக்கு அவையை நடத்துகிறார். தவெக உறுப்பினர்களுக்கு மரபு, சட்டம் தெரியவில்லை. சட்டசபைக்கு சென்றதுமே விதிகள் அடங்கிய புத்தகங்களை கொடுப்பார்கள். அதை கொடுத்தார்களா இல்லையா, இவர்கள் படித்தார்களா என தெரியவில்லை.

    Advertisement

    முதல்வர் விஜய் தனது மேஜையில் 3 ஃபைல்கள் உள்ளன என்றும் அவற்றை திறக்கும்படி வைத்துவிடாதீர்கள் என்றும் அவற்றை எப்போது எப்படி திறக்க வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.

    முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சவால் விடுத்துள்ளார். "தைரியம் இருந்தால் அந்த கோப்புகளை திறங்கள், யார் மீது குற்றம் இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள், அதை விட்டுவிட்டு ஊரில் வித்தைக்காரன் வித்தை காட்டுவது போல் காட்டக் கூடாது" என கூறியுள்ளார்.

    முதல்வர் சொன்னது, திமுகவினரை, அப்படியென்றால் நாங்களே கோப்புகளை திறக்க சொல்லியும் திறக்கவில்லை என்றால் முதல்வர் விஜய் சட்டசபையில் தவறான தகவலை சொல்கிறார் என்றுதானே அர்த்தம்.

    Advertisement

    அந்த கோப்புகளைத் திறக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் அந்த 3 கோப்புகளையும் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபையில் முதல்வர் விஜய் பொய் தகவல் சொன்னதாக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே கார் இருந்து கொண்டே கார் இல்லை என சொன்ன விசிக, தவெக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர வேண்டும் என சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DMK General Secretary Duraimurugan warns that DMK will bring Privilege motion against CM Vijay if he didn't open the files within a week.