வேலூர் காட்பாடியில் அரசு பெண் டாக்டர்.. செல்போனில் ரகசிய ஆடியோ.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்

  • வேலூர்: வேலூர், காட்பாடி அடுத்த அக்கிரெட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போட்ட விவரத்தை குறிப்பிட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனிடையே குழந்தைகளுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்க காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அங்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்க ரூ.900 லஞ்சம் வாங்கிய அரசு பெண் டாக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.

    Advertisement

    வேலூர், காட்பாடி அருகே உள்ளது அக்கிரெட்டிபுதூர் கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மனைவி ரவீனா. இவர்களுக்கு தீக்ஷிதா, பிரதீஷ்வர், லியாஸ் பகத்சிங் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 5, 4 மற்றும் 1-ம் வகுப்புகளில் படித்து வருகிறார்கள். பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், உடல் தகுதி குறித்த மருத்துவச்சான்று பெறுவதற்காக, கடந்த 22-ந் தேதி காலை 11 மணிக்கு காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளின் தாய் ரவீனா சென்றுள்ளார்.

    Advertisement

    அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் வெங்கடலட்சுமியிடம் குழந்தைகளுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு தகுதி சான்றிதழ் வழங்க ஒரு குழந்தைக்கு ரூ.300 வீதம் மூன்று குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.900 தர வேண்டும் என டாக்டர் கூறி உள்ளார்.

    அதற்கு ரவீனா தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதற்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும், பணம் கொடுக்கவில்லை என்றால் வேறு இடத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்று கொள்ளும்படி கூறிவிட்டாராம்.

    லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெற விரும்பாத ரவீனா, டாக்டர் பணம் கேட்டு பேசியதை, தனது செல்போனில் ரகசியமாக ஆடியோ பதிவு செய்து, அந்த ஆதாரத்துடன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

    Advertisement

    அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.900 பணத்தை ரவீனாவிடம் கொடுத்து டாக்டர் வெங்கடலட்சுமியிடம் கொடுக்குமாறு அனுப்பினர். அவர் நேற்று முன்தினம் மாலை சுகாதார நிலையத்தில் ரசாயனம் தடவிய பணத்தை டாக்டர் வெங்கடலட்சுமியிடம் கொடுத்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே சென்று ரசாயனம் தடவிய பணத்துடன் டாக்டர் வெங்கடலட்சுமியை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காட்டிபாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Katpadi female doctor arrested in Vellore for accepting a ₹900 bribe to issue medical fitness certificates to students