'ஜேகே டயர் புகழ்'.. ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா யார்? இவரது பின்னணி என்ன?

  • வேலூர்: 'ஏ.கே. டயர்ஸ்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாகத் தவறுதலாக 'ஜே.கே. டயர்ஸ்' என்று குறிப்பிட்டதுடன், அந்த ஆலையை மூட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்த ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா யார் என்று நெட்டிசன்கள் பலர் தேடி வருகிறார்கள். அவரது பின்புலம் என்னவென்றால், ராணிப்பேட்டையில் மிகவும் செல்வாக்கான தி.மு.க அமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதியான காந்தியை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனவர் ஆவார். அவரைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

    Advertisement

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, நேற்று சட்டசபையில் பேசும்போது, "இங்கு ஜே.கே. டயர் கம்பெனி (டயர் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடை) இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆட்சியிலிருந்தே வைத்து வருகிறார்கள். கண்டிப்பாக நமது ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை. அங்கிருக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். அதற்கு அமைச்சர்கள் ராஜீவ் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் பதில் அளித்தனர். ஆனால் அப்படி ஒரு கம்பெனியே இல்லை.. சட்டசபை வரலாற்றில் இல்லாத ஒரு கம்பெனி குறித்து விவாதம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

    Advertisement

    இதுபற்றி விசாரித்த போது, ராணிப்பேட்டை மாவட்டம் வானாபடி அருகே காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் 'ஏ.கே. டயர்ஸ்' என்ற பழைய டயர்களை உருக்கும் ஆலை ஒன்று இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இது முகுந்தராயபுரம் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. முருகனுக்குச் சொந்தமான ஆலை என்று கூறப்படுகிறது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், பின்னர் அதிகாரிகள் சீல் வைத்துச் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தான் மூட வேண்டும் என்று ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா கூறினாராம். அப்படி குறிப்பிடும் போது தவறுதலாக ஜேகே டயர்ஸ் என்று கூறினாராம். இந்த சூழலில் அவரை பற்றி பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

    Advertisement

    ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிராவைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, ராணிப்பேட்டை தொகுதியைப் பற்றி முதலில் பார்ப்போம். வேலூர் மாவட்டத்தின் தொழில் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக இருந்ததுதான் ராணிப்பேட்டை. ராணிப்பேட்டை முற்றிலும் தொழிற்சாலைகள் நிறைந்த, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட ஒரு தொகுதியாகும். காஞ்சிபுரத்திற்கும் வேலூருக்கும் நடுவில் உள்ள மிக முக்கியமான நகரமாகும். பள்ளிப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, காட்பாடி, நாட்ராம்பள்ளி ஆகிய தொகுதிகளுக்கு நடுவில் உள்ள தொகுதிதான் ராணிப்பேட்டை. ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கியது ராணிப்பேட்டை தொகுதி. இங்கு அதிகபட்சமாக தி.மு.க ஏழு முறை வென்றுள்ளது.

    Advertisement

    தி.மு.க-வின் செல்வாக்கான மூத்த அரசியல்வாதியான காந்தி மட்டும் இங்கு நான்கு முறை வென்றுள்ளார். கடைசியாக இரண்டு முறை காந்தி வென்ற தொகுதியாகும். இவரைத் தோற்கடித்துதான் எம்.எல்.ஏ ஆகியுள்ளார் தாஹிரா. தாஹிரா மிகவும் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; மிக எளிய பின்னணியைக் கொண்டவர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடியைச் சேர்ந்த 40 வயதாகும் தாஹிரா, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கணவர் இப்ராஹிம். இவரது வேட்புமனுவை ஆராய்ந்தபோது, கையில் ரொக்கமாக ரூ.3,000 இருப்பதாகவும், வங்கிக் கணக்கில் ரூ.20,000 உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவரது கணவரின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 இருப்பதாகவும், கையில் ரூ.3,000 உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவர் தனக்கு வாகனம் எதுவும் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. சொத்து உள்ளதாகவோ, கடன் இருப்பதாகவோ குறிப்பிடவில்லை.

    Advertisement

    மிகவும் எளிய குடும்பப் பின்னணி கொண்ட தாஹிரா, இன்ஸ்டாகிராமில் (Instagram) மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். தேர்தலுக்கு முன்பும் இன்ஸ்டாவில் மிகவும் தீவிரமாக இயங்கி வந்தார். ராணிப்பேட்டை தொகுதியில் கணிசமான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இதுதவிர விஜய் ரசிகர்களின் எண்ணிக்கையும் ராணிப்பேட்டையில் அதிகமாக இருந்தது. இங்கு போட்டியிட தாஹிராவிற்கு விஜய் வாய்ப்பு அளித்தார். இங்கு தாஹிரா 91,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் காந்தியை 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, 'ஜே.கே. டயர்ஸ்' எனச் சட்டசபையில் விவாதிப்பதற்கு முன்பே, பா.ஜ.க-வை கடுமையாகச் சட்டசபையில் பேசியதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். இவர் அண்மையில் சட்டசபையில் பேசும்போது, பா.ஜ.க-வைக் கொள்கை எதிரி என்று எங்கள் தலைவர் விஜய் அறிவித்ததுடன், அந்தக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர் என்று பேசியதுடன், சட்டசபையில் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். முன்னதாகக் கோவில் விழாவிலும் கலந்து கொண்டிருந்தார்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயில் வளாகத்தில், முருகர் மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான தொடக்க விழா அண்மையில் நடந்தது. சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதுடன், இந்து முறைப்படி நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அதேபோல் தொகுதியில் நடந்த பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பங்கேற்று மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோக்களைக் காண முடிந்தது.

    Topics: #ranipet #tvk #mla

    English Summary

    Many netizens are searching for details about Tahira, the Ranipet MLA who mistakenly referred to "AK Tyres" as "JK Tyres" while demanding the closure of the plant in the Legislative Assembly. Let us look at her background.