மக்களை வெறுப்பவன் நான் அல்ல.. நாளை மறுநாள் தேர்தல் வைத்தால் கூட வெற்றி பெறுவேன்: துரைமுருகன் உறுதி

  • வேலூர்: "இந்த மக்கள் ஏதோ ஒரு சிறு பிள்ளைத்தனமாக செய்து விட்டார்கள் என்பதற்காக நான் தொகுதியோ, மக்களையோ வெறுக்கிறவன் அல்ல. நாளை மறுநாள் தேர்தல் வைத்தால் கூட வெற்றி பெறுவேன்" என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முந்தைய ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார் துரைமுருகன். துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 11 முறை போட்டியிட்டு, 8 முறை வெற்றி பெற்றவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை பார்வையிட வந்தார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.

    Advertisement

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இங்கு கட்டப்பட்டு வரும் தடுப்பணை கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த திட்டம், பொன்னையில் கட்டப்பட்ட வரும் தடுப்பணை பெற்ற பிள்ளையை போல் என்பதால் பார்க்க வந்தேன், என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய துரைமுருகன், "மழை காலத்தில் சித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை போக்கும் நோக்கில் பொன்னை அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை விரைவில் திறக்க வேண்டும். எந்த ஆட்சியாளர் திறந்தாலும் பரவாயில்லை. இப்போது நான் எம்எல்ஏ அல்ல. இருந்தும் நான் அந்த திட்டம் எப்படி நடைபெற்று வருகிறது என பார்வையிட்டு வந்தேன்.

    Advertisement

    இந்தத் தொகுதியில் வெற்றியை இழந்திருந்தாலும் இது என்னுடைய தொகுதி. 50 ஆண்டு காலம் என்னை வளர்த்த தொகுதி, என்னை உயர்த்திய தொகுதி. எனவே இந்த மண்ணுக்கு நான் இறுதி வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், என்னால் என்ன முடியுமோ அதை இந்த மண்ணுக்கு செய்வேன். என் தொகுதியை நான் பெற்ற பிள்ளையை போல் நேசிக்கிறேன்.

    இந்த மக்கள் ஏதோ ஒரு சிறு பிள்ளைத்தனமாக செய்து விட்டார்கள் என்பதற்காக தொகுதியோ, மக்களையோ நான் வெறுக்கிறவன் அல்ல. என்னை விரும்புகிற மக்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள். நாளை தேர்தல் வைத்தால் கூட 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" எனக் கூறியுள்ளார்.

    Advertisement

    மேலும் பேசிய துரைமுருகன், "காட்பாடி அடுத்த மகிமண்டலத்தில் வரவுள்ள சிப்காட்டை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள். சிப்காட் வந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு தொழிற்சாலையைக் கொண்டு வருவதையே வேண்டாம் எனச் சொல்கிறார்கள்.

    கர்நாடகா ஒரு தனி நாடு அல்ல. அது இந்தியாவின் ஒரு அங்கம். அவர்கள் அணை கட்டுவோம் என்று கூறிய உடன் அதை செய்துவிட முடியாது. முதலில் அணையைக் கட்டுவதற்கான அறிக்கையை தயார் செய்ய வேண்டும். பின்னர், அந்த அறிக்கையை மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து, அங்கு அதன் அனுமதியைப் பெற வேண்டும்.

    Advertisement

    இதுதவிர, மாசு கட்டுப்பாடு வாரியம் என பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். இவை அனைத்திலும் மேகதாது அணைக்கு அனுமதி பெற்றாலும், கடைசியில் நாம் அதை வேண்டாம் என நிராகரித்துவிட்டால், அதை நிறைவேற்ற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "I am not someone who hates the constituency or the people simply because they did something childish. Even if the election were held the day after tomorrow, I would win," stated former DMK Minister Duraimurugan.