வேலூர்: வறுமை காரணமாக 4வது பிரசவத்தில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை, பெண் ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கின்றனர்.
ஒன்றுபட்ட வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள மாங்காதோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (38). இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. அவாமா (36) என்கிற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் 1 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ரஹ்மத்துல்லா டீ கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி அவாமாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது அவருக்கு 4வது பிரசவம். குடும்பம் மிகவும் வறுமையான சூழலில் இருந்ததாலும்.. ஏற்கெனவே இருக்கும் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாலும், இந்த தம்பதியினர் பெண் குழந்தையை விற்க முடிவெடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக பெங்களூரில் உள்ள ஆட்களிடத்தில் பேசி, ரூ.1 லட்சத்திற்கு சம்ரீன் தாஜ் என்பவருக்கு குழந்தையை விற்றிருக்கின்றனர். இந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் தெரிய வந்திருக்கிறது. பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மருத்துவ செவிலியர்கள் வந்தபோது.. விஷயம் அவர்கள் காதுகளுக்கும் சென்றிருக்கிறது. இந்த தகவல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுகப்பரியாவுக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து குழந்தையை வாங்கிய சம்ரீன் தாஜ் மற்றும் அவரது கணவர், குழந்தையை விற்ற அவாமா மற்றும் அவரது கணவர் ரஹ்மத்துல்லா உள்ளிட்டோரை கைது செய்திருக்கின்றனர். பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, வறுமை காரணமாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் சென்னை வில்லிவாக்கத்திலும் இதேபோல குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தையை விற்கும் அளவுக்கா வறுமை ஏற்பட்டிருக்கிறது? கடந்த 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தன. எத்தனையோ பொருளாதார அளவீடுகளில் தமிழ்நாடு இந்தியாவின் பல மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட இங்கு வந்து வேலை பார்த்து பிழைத்துக்கொள்கிறார்கள். அப்பேற்பட்ட மாநிலத்தில், பச்சிளம் குழந்தையை வறுமை காரணமாக விற்பனை செய்திருப்பது.. தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு சூழல், தனிநபர் வருமானம் உள்ளிட்டவற்றின் மீது கேள்வியை எழுப்பியிருக்கிறது.