எல்லோரும் எம்ஜிஆர், விஜய் ஆகிட முடியாது! தனுஷ் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு துரைமுருகன் ஒரே போடு

  • வேலூர்: விஜய் அரசியலுக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த துரைமுருகன் எல்லாரும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது என பதிலளித்தார்.

    Advertisement

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயேன் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக பேசப்படுவது பற்றி கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    இளநீர் கடை வைப்பது போல..

    இதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 2 நடிகர்கள் புதியதாக அரசியல் நோக்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கேட்கிறீர்கள். ஒருவர் இளநீர் கடை வைத்தால் நன்றாக போனால் அதே போன்று மற்றவர்களும் வைப்பார்கள். அது போன்று தான் இது.

    இதெல்லாம் நிற்காது. ஏதோ எம்.ஜி.ஆர்., ஜோசப் விஜய் போன்று மற்றவர்கள் ஆகிவிட முடியாது" என்றார். தொடர்ந்து தவெக அரசை கடுமையாக விமர்சித்த துரைமுருகன் கூறியதாவது:-

    பயம் விட்டு போய்விட்டது

    பருவமழை தொடர்பாக தவெக அரசு எவ்வளவு பாதுகாப்பு செய்திருந்தாலும் கட்டுக்கடங்காத மழை வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்தை செய்ய வேண்டும். அதுதான் முறை. இந்த ஆட்சியில் அனைத்துமே மறைமுகமாக உள்ளது. எதுவுமே வெளிப்படை தன்மையோடு இல்லை. இது ஒரு மர்மமான அரசாங்கமாக உள்ளது.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு கொஞ்சம் கூட கிடையாது. காரணம் போலீசாரிடம் சரியான அணுகுமுறை உள்ளதா என தெரியவில்லை. ஆளும் கட்சியினர் தான் அதிக போதைப்பொருள் வைத்திருப்பதாக பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆளும் கட்சிக்கு கொஞ்சம், கொஞ்சமாக பயம் விட்டு போய்விட்டது. நாம் தான் ஆளும் கட்சி. நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனுடைய விளைவு, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது அதைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை" என்றார்.

    அரசியலுக்கு ஆயத்தமாகும் தனுஷ்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். அதேபோல, நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, நலத்திட்ட உதவிகளை செய்வது என தனுஷின் நடவடிக்கை விரைவில் அவர் அரசியல் களத்தில் குதிப்பத்ற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    விஜய் வெற்றி பெற்றதால்..

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை பிடித்த நிலையில், அரசியல் கனவுடன் இருந்த நடிகர்களுக்கு விஜய்யின் வெற்றி ஊக்கத்தை கொடுத்துள்ளது.

    இதன் காரணமாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியல் களத்தில் எண்ட்ரி கொடுக்கும் திட்டத்துடன் தங்களின் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொளவதாக பரவலாக பேசப்படும் நிலையில்தான், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆர், விஜய்யை போல எல்லோருக்கும் வெற்றி கிடைக்காது என்று விமர்சித்து இருக்கிறார்.

    English Summary

    Duraimurugan: Amidst widespread speculation that Dhanush and Sivakarthikeyan are planning their future moves with an eye toward entering the political arena, DMK General Secretary Duraimurugan has offered a critique, stating that not everyone can achieve the kind of success that MGR or Vijay have attained.