வேலூர்: திருப்பத்தூர் நகரமே இன்று அதிகாலையில் நடந்த அந்த சம்பவத்தைக் கேட்டு உறைந்து போய் கிடக்கிறது... எங்கோ குக்கிராமத்திலோ, மலைப்பிரதேசங்களிலோ, ஆள் அரவமற்ற பகுதியிலோ இப்படியான சம்பவம் நடக்கவில்லை.. நகரத்தில், அதுவும் மக்கள் நடமாட்டத்துடன் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு பகுதியிலேயே, அதுவும் காவல்துறை அதிகாரிகளின் கண்பார்வையிலேயே இருக்கும் ஒரு இடத்தில், 50 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் நகரத்தில் வசித்து வருகிறார் அந்த 50 வயது பெண்.. விடிகாலையில் தன்னுடைய பிழைப்புக்காக வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.. திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகத்திற்கு அருகில் வீரபத்திர முதலியார் பூங்கா உள்ளது..
இந்த பூங்கா பகுதியை அவர் கடந்தபோது, அங்கே ஒரு நபர் திடீரென வழிமறித்தார். அந்நபருக்கு 23 வயதிருக்கும்.. போதையில் தள்ளாடியபடி நின்றார்.. அவரை பார்த்ததுமே நிலைகுலைந்த அந்தப் பெண்மணி, பயத்தில் அலறியுள்ளார். ஆனால், அந்த போதை இளைஞரோ, பெண்ணின் வாயைப் பொத்தி, பலவந்தமாக அந்த பூங்காவிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விடிகாலையில் பூங்காவுக்குள் யாருமே இல்லை என்பதால், அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், அங்கிருந்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி, தீவிர விசாரணையில் இறங்கினர்.. சம்பந்தப்பட்ட நபர் கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.. இதே டிஎஸ்பி அலுவலகப் பகுதியில்தான், சில நாட்களுக்கு முன்புதான் ஒரு பெண் வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. அதாவது அந்த கொலை நடந்த இடத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் இந்த பாலியல் கொடுமை நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தது சாதாரண இடம் கிடையாது.. . திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கியூ பிரான்ச் போலீஸ் நிலையம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலகம், அரசு பூங்கா மற்றும் ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தமும் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மிக முக்கியமான அரசு வளாகப் பகுதி இதுவாகும். போலீசாரின் ரோந்துப் பணியும் நடமாட்டமும் எந்த நேரமும் இருக்க வேண்டிய இந்த இடத்தில், தொடர்ந்து குற்றங்கள் அரங்கேறுவது நிறைய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. அதைவிட முக்கியமாக, முன்ப கொலை நடந்தபோதே, அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அதனால்தான் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு சிக்கல் இருந்தது. அப்போதே அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.. ஆனால், போலீசார் இதுவரை அங்கே கேமராக்களை பொருத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு, போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அப்பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருப்பத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.. பெண்கள் பாதுகாப்புக்காக "சிங்கப்பெண் அதிரடி படை" இருந்தும், பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு எங்கே போனது என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது...!!திருப்பத்தூர் பூங்கா
டிஎஸ்பி அலுவலகம்
சிசிடிவி கேமராக்கள் எங்கே
சிங்கப்பெண் அதிரடி படை