“மாசம் ரூ.1 லட்சம் வரனும்..” வேலூர் செங்கல் சூளையில் தாண்டவமாடிய தவெக ஒன்றிய செயலாளர்!

  • வேலூர்: தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட முடியவில்லை. இந்நிலையில் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடையே மாதம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு தவெக ஒன்றிய செயலாளர் மிரட்டியிருப்பது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியை பெற்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியில் அமர்ந்திருந்தது. இப்படி இருக்கையில் ஆட்சிக்கு அவதூறு ஏற்படுத்துவதை போல நிர்வாகிகள் சிலர் நடந்துக்கொண்டிருப்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இன்று வேலுர் மாவட்டம் கனியம்பாடியில், தவெக ஒன்றிய செயலாளர் ஒருவர் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் வலுகட்டாயமாக ரூ.1 லட்சம் மாமுல் கேட்டிருக்கிறார். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,

    "நாங்கள் காலங்கலாமாக இங்கு செங்கல் சூளை நடத்தி வருகிறோம். இது எங்கள் குடும்ப தொழில். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. ஆனால், இப்போது தவெக ஒன்றிய செயலாளர் வந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்.

    Advertisement

    எங்களை போல தொழில் செய்யும் பலரையும் அவர் மிரட்டியிருக்கிறார். பணம் தரவில்லை எனில் வேலை நடக்காது என்றும், வேலை செய்ய விட மாட்டோம் என்றும் பயமுறுத்துகிறார். மேலிடத்தில் சொல்லிதான் இப்படி செய்வதாகவும், இந்த இடத்திற்கு வர லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், அதை திரும்ப எடுக்கத்தான் இப்படி வசூலிப்பதாகவும், அமைச்சர்கள், மாவட்ட செயாலாளர் சொல்லிதான் இப்படி செய்வதாக கூறியிருக்கிறார்.

    தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இன்னும் 30 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கட்சியின் பெயரை சிலர் இப்படி டேமேஜ் செய்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கு ஆதரம் இருக்கிறது. உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    வேலூர் மட்டுமல்ல.. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து விஷயத்தில் தவெகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். மாற்றம் என்று சொல்லிக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சராக விஜய் இருக்க வேண்டும்.. இப்படியான கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை விஜய் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    English Summary

    TVK: It has not yet been even a full month since the TVK assumed power. Against this backdrop, the TVK Union Secretary in Vellore has reportedly threatened brick kiln owners, demanding a monthly payment of ₹1 lakh; this incident has sparked severe discontent among the workers.