வாணியம்பாடியில் சோகம்.. வீட்டில் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

  • திருப்பத்தூர்: வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது, மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதியில் வேலை பார்த்து வந்த ஃபயாஸ் அகமது, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ராமாயண தோப்பு, வி.எஸ். விஸ்வநாதன் தெருவில், வீட்டின் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஃபயாஸ் அஹமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    Advertisement

    ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஃபயாஸ் அஹமது, இவர் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மூன்று மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெரியாங்குப்பம் கிராமத்தில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி ராமாயண தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த அவர், பெற்றோருடன் தங்கியிருந்தார். இன்று தாய் வீட்டின் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக நீளமான இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி முயன்றுள்ளார்.

    Advertisement

    அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கம்பி வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து ஃபயாஸ் அஹமது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர போலீசார், உயிரிழந்த பயாஸ் அஹமதின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    In Vaniyambadi, a man died from an electric shock while attempting to clear a clogged household drainage pipe—an incident that has come as a great shock. Fayas Ahmed, who had been working in Saudi Arabia, was home on vacation when the fatal electrocution occurred.