வேலூர்: வேலூர் மாவட்டம் தங்க நகை அடகு கடையில் நடந்த இந்த சம்பவம், தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய திருடன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலத்தை தொடர்ந்து, கர்நாடக காவல் துறை, திருப்பத்தூர் அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு காமராஜர் நகர் பகுதியில், அதிமுக நகர செயலாளராக உள்ளவர் சரவணன்.. இவர் ஒரு தொழிலதிபரும்கூட.. திருப்பத்தூர், பச்சூர், ஆந்திர மாநிலத்தின் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை வியாபாரமும், அடகு தொழிலும் செய்து வந்துள்ளார்.
மதுரை, சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா எனப் பல இடங்களில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர் பட்டறை சுரேஷ்... இவர் மீது வந்த தொடர் புகார் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திர மாநிலக் காவல் துறை கைது செய்திருந்தது.. அவரிடம் விசாரணையும் நடத்தியது.. அப்போது, திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் சரவணனுக்குச் சொந்தமான அடகு கடையில் நகைகளை அடகு வைத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஆந்திரப் படை, சரவணனிடமிருந்து முதற்கட்டமாக 10 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்து சென்றது. ஆனால், கதை இதோடு முடியவில்லை. அடுத்த சில நாட்களிலேயே, கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நகர போலீசார் வேறொரு திருட்டு வழக்கிற்காக இதே பட்டறை சுரேஷைக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கைது செய்தனர். ஆந்திரா போலீஸ் போலவே கர்நாடக போலீசும், பட்டறை சுரேஷிடம் விசாரணை நடத்தியது.. இந்த முறை அவர் சொன்ன தகவல் காவல் துறையினரையே அதிர வைத்தது. பங்காருபேட்டை பகுதியில், தான் கைவரிசை காட்டிய ரூ.70 லட்சம் மதிப்பிலான 51 சவரன் தங்க நகைகளை, அப்படியே கொண்டு போய் சரவணனின் அடகு கடையில் ஒப்படைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இந்த நகை திருட்டு விவகாரம் சீரியஸானதால், கர்நாடகக் காவல் துறை, உடனடியாக சரவணனுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மனைக் கண்டுகொள்ளாமல் சரவணன் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்மனுக்கு மதிப்பளிக்காததால் கோபமடைந்த கர்நாடகக் காவல் துறையினர், நேற்று காலை நேரடியாகத் திருப்பத்தூர் காமராஜர் நகரில் உள்ள சரவணனின் வீட்டிற்கே புகுந்து விட்டனர். ஆனால், சரவணன் வீட்டில் இல்லை.. இதனால் அங்கிருந்த அவரது மகன் சந்துருவை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து, கர்நாடகக் காவல் துறையைக் கண்டித்து அதிரடியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே களேபரமாகி விட்டது.. சரவணன் தரப்பு விசாரணைக்கு முற்றிலும் ஒத்துழைக்க மறுப்பதாகக் கர்நாடக அதிகாரிகள் குற்றம்சாட்டவே, நிலைமையை கட்டுப்படுத்த திருப்பத்தூர் டவுன் காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த காரசாரமான பேச்சுவார்த்தையின் முடிவில், கர்நாடக போலீசார் ஒரு நிபந்தனையை விதித்தனர். ஒன்று 51 சவரன் திருட்டு நகைகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் கர்நாடகாவிற்கு நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். காவல் துறையின் இந்த நடவடிக்கையால் வேறு வழியின்றி அதிமுக நகர செயலாளர் சரவணன் மற்றும் அவரது அண்ணன் கணேசன் ஆகிய 2 பேரும் விசாரணைக்கு ஆஜராக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 2 பேரையும் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்த கர்நாடகக் காவல் துறையினர், அவர்களைப் பங்காருபேட்டைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர்
சரவணன் தங்க நகை அடகு கடை
சம்மன் அனுப்பிய போலீஸ்
51 சவரன் நகை திருட்டு