வேலூர்: பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடவும், விற்பனையாளர் மற்றும் மாவட்ட மேலாளர் ரூ. 1 கோடியை அபராதமாக செலுத்தவும் வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஸ்கடர் குடியிருப்பைச் சேர்ந்த சக்திவேல் (வயது 28) என்பவர் கடந்த மார்ச் மாதம், பாலாறு மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, தலா ரூ. 170 விலையுள்ள மூன்று பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். இதற்கான மொத்தத் தொகை ரூ. 510. ஆனால், அவரிடம் ரூ. 570 வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு பீர் பாட்டிலுக்கு ரூ. 20 வீதம், மொத்தம் ரூ. 60 கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளரிடம் இதுபற்றி கேட்டதற்கு அப்படித்தான் வாங்குவோம் எனக் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இதுகுறித்து சக்திவேல், கடந்த மே 12 ஆம் தேதி வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி மீனாட்சி சுந்தரம் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 27) நடைபெற்ற இறுதி விசாரணையில், பீர் பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விற்பனையாளர் மற்றும் மாவட்ட மேலாளர் தரப்பிற்கு ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த தொகையை கொண்டு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு இழப்பீடாக ரூ. 3,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ. 1,000 என மொத்தம் ரூ. 4,000 வழங்க உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது அது தொடர்பான வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தமாக 3 நாட்கள் லீவு.. FL-2 பார்களையும் மூட உத்தரவு! குடிகாரர்களுக்கு ஷாக்!