வேலூர் ஜோடி ஜாலி வாழ்க்கை! 36 சவரன் நகையுடன் சித்தூர் பஸ்ஸில்.. ஒரே துப்பில் காட்பாடி போலீஸ் சபாஷ்

  • வேலூர்: வேலூர் காட்பாடி அருகே ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 36 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கணவன். மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். வெளியூருக்குச் சென்று வாடகை வீடு எடுத்து தங்கி, திருட்டில் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். ஓய்வு பெற்ற டெல் நிறுவன ஊழியரான இவரது மனைவி மரியா (63), அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகள் திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.

    Advertisement

    வேலூர் காட்பாடி தம்பதி

    கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ராஜ்குமாரும், மரியாவும் ஆற்காடு வேப்பூரில் உள்ள சர்ச் பாதிரியாரை பார்ப்பதற்காக காலை வீட்டை விட்டு கிளம்பி சென்றிருக்கிறார்கள்.. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பாதிரியாரை பார்த்துவிட்டு, இரவு 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து 2 பேருமே அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 7 சவரன் ஆரம், 5 சவரன் நெக்லஸ், 2 சவரன் சிறிய நெக்லஸ், 5 சவரன் டாலர் செயின், 4 சவரன் வளையல், 4 சவரன் கம்மல், ஐந்தரை சவரன் செயின், மோதிரம் மற்றும் பிரெஸ்லெட் என மொத்தம் 36 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதுகுறித்து மரியா அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் சாராவும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே காட்பாடி டிஎஸ்பி விஜிகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வேலூர் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்..

    வேலூர் போலீசுக்கு கிடைத்த துப்பு

    அப்போதுதான் போலீசாருக்கு முக்கியமான ஒரு துப்பு கிடைத்தது. கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞரும் பெண்ணும் அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதும், பஸ் ஸ்டாண்டில் நின்று, சித்தூர் நோக்கி செல்லும் பஸ்ஸில் ஏறியதும் தெரியவந்தது.

    Advertisement

    இதையடுத்து போலீசார் உடனே சித்தூருக்கு விரைந்தனர். அங்குள்ள பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை சித்தூர் போலீசாரின் உதவியுடன் ஆய்வுகளையுமம் செய்தனர்.. . இறுதியில் அந்த ஜோடி ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.. 2 பேரையும் அதிரடியாக கைது செய்து காட்பாடி ஸ்டேஷனுக்கும் அழைத்து வந்து விசாரித்தனர்.. அப்போதுதான் அவர்கள் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் சொன்னார்கள்..

    அதிர்ச்சி வாக்குமூலம்

    சம்பந்தப்பட்ட ஜோடி பெயர் முத்துவேல் கார்த்திக் - பிரபாவதி.. இவர்கள் விருதுநகரை சேர்ந்தவர்கள்.. முத்துவேல் கார்த்திக்கு 32 வயதாகிறது.. பிரபாவதிக்கு 30 ஆகிறது.. இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.

    Advertisement

    ஆனால் ஆரம்பத்திலேயே ஜோடியாக திருடுவதே இவர்களது வாடிக்கையாம்.. வெளியூர்களுக்கு சென்று வாடகை வீடு எடுத்து தங்கி, அந்தந்த பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவார்களாம்.. திருடிய நகைகளையும், பொருட்களை உடனே விற்று கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்..

    ஜோடியாக கைது

    அந்தவகையில், சில மாதங்களுக்கு முன்பு சித்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.. அங்கிருந்தபடியே, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜோடியாக சென்று கைவரிசை காட்டி விட்டு வந்தார்களாம்.. அப்படித்தான் காட்பாடி ராஜ்குமார் வீட்டிலும் திருடியிருக்கிறார்கள்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடமிருந்து 26 சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுப் பணத்தில் வாங்கிய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Advertisement

    கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.. வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்தினருக்கு, சிசிடிவி காட்சிகள் மூலமாக கணவன், மனைவி திருட்டு கும்பல் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....!!!!

    English Summary

    Vellore Couple’s Luxury Life.. Boarding a Chittoor Bus With 36 Sovereigns of Gold.. Katpadi Police Crack the Case With One Clue