வேலூர்: தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவிவரும் நிலையில் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி மழைக்கஞ்சி எடுப்பது, சிறப்பு வழிபாடுகள் என நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீட்டு திருமணத்தை போலவே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, யாக பூஜைளுக்கு பிறகு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, மொய் எழுதி ஆசிர்வாதம் பெற்றுச் சென்றிருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத முற்காலங்களில் கழுதைகளுக்கு (ஆண் கழுதை - பஞ்சகல்யாணம், பெண் கழுதை - பஞ்சகல்யாணி) திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று நமது முன்னோர்களால் நம்பப்பட்டு வந்தது.
இதனை வெயில் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காண முடியும். இன்னும் அந்த சம்பிரதாயம் வேலூர் அணைக்கட்டு ஒடுகத்தூர் பகுதிகளில் கடைபிடிக்கப்பட்ட வருகிறது. இந்த ஆண்டு கடுமையான வெப்பம் பதிவாகி வரும் நிலையில், பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
அதே தற்போது ஒடுகத்தூர் சுற்றுப்பகுதிகளில் கடும் வரட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் முற்றிலும் காய்ந்து போய் விட்டது. எனவே விவசாயிகளின் நன்மைக்காகவும், மழை வேண்டியும், தண்ணீர் பற்றாக்குறை போக்கவும் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் இன்று கழுதைகளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் அச்சிட்டு சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிறகு பராபவ வருடம் ஆடி மாதம் 24ம் நாள், ஏகாதசி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினமான இன்று காலை ஆண் கழுதைக்கு மணமகன் அலங்காரமும், பெண் கழுதைக்கு மணமகள் அலங்காரமும் செய்து மேலதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர், ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் பெண் அழைப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மனப்பந்தல் அமைத்து அங்கு மணக்கோலத்தில் இரு கழுதைகளையும் பொதுமக்கள் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வீடுகளில் நடப்பது போலவே கழுதைகளின் திருமணத்துக்கு முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், கழுதைகளுக்கு பால், மஞ்சள், குங்குமத்தால் சிறப்பு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து யாக பூஜைகள் செய்து ஐயர் மந்திரங்கள் முழங்க கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் மத்தியில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது, ஏராளமான பொதுமக்கள் மணமக்களுக்கு 'மொய்' எழுதி ஆசிர்வாதம் பெற்று சென்றனர். பின்னர், திருமணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளை மணக்கோலத்தில் ஊர்வலமாக அழைத்து சென்று ஆங்காங்கே உள்ள எல்லை கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும் என்று நம்படுவதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.வேலூர் பஞ்சம்
கழுதைக்கு திருமணம்
சிறப்பு பூஜை
திருக்கல்யாணம்
மரபு விழா